அதிரடி கைதுகள், இராணுவ ஆக்கிரமிப்பு ; பிரதமரிடம் முறையிட்டார் சம்பந்தன்
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்படுகின்ற அதிரடிக் கைதுகள் மற்றும் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று புதன்கிழமை பகல் அலரிமாளிகையில் வைத்து சந்தித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
அதேபோன்று கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதமருக்கு தான் நீண்ட விளக்கம் அளித்திருப்பதாக சம்பந்தன் தெரிவித்தார்.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பொது மக்களின் காணிகளை இராணுவம் விடுவித்து உரியவர்களிடம் வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாக சம்பந்தன் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பிரதமர், எதிர்வரும் வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியவுடன் இந்த விடயங்கள் தொடர்பில் தகுந்த பதில் அளிக்கப்படும் என்ற உறுதி மொழியையும் வழங்கியுள்ளார்.








