Breaking News

யாழ். மாவட்ட செயலகத்தை மூடி போராட்டம்!- அரசாங்க அதிபர் தப்பியோட்டம்

இரண்டாம் இணைப்பு

காணி அளவீட்டிற்கு எதிராக யாழ். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பின் கதவினால் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ். பிரதேச செயலகத்தின் வாயிலிற்கு புது பூட்டினை போட்டு மூடியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது

(1ம் இணைப்பு) இராணுவத்திற்காக நில சுவீகரிப்பு : யாழ். மாவட்ட செயலகத்தை மூடி போராட்டம்

இராணுவத்தினரின் தேவைக்காக யாழ்.ஆணைக்கோட்டை கூழாவடி பகுதியிலுள்ள பொதுமக்கள் காணியை சுவீகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு நில அளவையாளர்கள் நில அளவைக்காக சென்றிருந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்திய மக்கள், தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்குச் சென்று, காரியாலயத்தை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததோடு, தமக்கு தீர்வு வழங்க வேண்டுமென அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்தை காரியாலத்திற்குள் வைத்து பூட்டியுள்ளனர். எனினும், அரசாங்க அதிபர் வேறு வழியாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தமக்கான தீர்வு கிடைக்கும்வரை அங்கிருந்து செல்லமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் காரியாலயத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் உள்ளபோதும், இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை காணப்படுவதாலேயே, இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பாரிய பிரச்சினையை தோற்றுவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.