ஜெயலலிதாவுக்கு ரூ.2.04 கோடி கடன்! வேட்பு மனுவில் தகவல்
ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா தமக்கு ரூ.120 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலைதாவின் வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, அவருக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும்.
இதில், வாகனங்கள், நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.41.63 கோடி. நிலம், கட்டிடம் போன்ற அசையா சொத்துக்களின் மதிப்பு, ரூ.76.95 கோடியாகும்.
மேலும், தனக்கு ரூ.2.04 கோடி கடன் இருப்பதாகவும் ஜெயலலிதா தமது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தமது சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி என குறிப்பிட்டிருந்தார்.
இதில் அசையும் சொத்துக்கள் ரூ.45.04 கோடி எனவும் அசையா சொத்துக்கள் ரூ.72.09 கோடி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடி எனவும், இது 2006 ஆம் ஆண்டில் ரூ.24.7 கோடியாக இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேப்போன்று திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2014-15 ஆம் ஆண்டில் தனக்கு ரூ. 1.21 கோடி வருமானம் வந்ததாக தமது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துணைவியர் மு.க.தயாளு அம்மாளுக்கு ரூ.9,21,430 வருமானம் வந்தததாகவும், இராசத்தி அம்மாளுக்கு ரூ.1,16,96,350 வருமானம் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.