Breaking News

242 தடவைகள் தமிழ் மக்கள் இலங்கையில் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டனர்

அண்மையில் மதுரையில், தமிழ்நாட்டு மக்களுடன் நடந்த கலந்துரையாடலில் சி.சிவமோகன் எம்.பி கருத்து தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரமடைந்த பின் 242 தடவைகள் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்ட வரலாறுகள் பதிவுகளாக உள்ளது என்றார்.

இங்கினியாகெல கரும்புத் தொழிற்சாலையில் 150 தமிழர்கள் 1956 இல் கொல்லப்பட்டது முதல் தொடங்கிய தமிழர் படுகொலை வரலாறு 1983 இல் இனக்கலவரத்தில் 3000 பேர்வரை கொல்லப்பட்டனர், வெலிக்கடை சிறைச்சாலையில் 35 தமிழ் கைதிகள் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டது, சாம்பல் தோட்டம் படுகொலை வரை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் 40000 தமிழர்கள் கொல்லப்பட்டது வரை 242 தடவைகள் தமிழ் மக்கள் கூட்டுக் கூட்டாக கொல்லப்பட்டதை சொல்லலாம்.

கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்களவர்களும், சிங்கள படையினருமே ஈடுபட்டனர். எனவே இலங்கை தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் சிங்கள இனத்தால் நிறைவேற்றப்பட்ட போது சம்பந்தப்பட்ட சிங்கள அரசுகள் பாராமுகமாக இருந்தனர் என்பது கண்கூடு. கொல்லப்பட்ட நிகழ்வுகளுக்கு நீதி விசாரணைகளை நடாத்தக் கூட சிங்கள அரசுகள் தயாராக இருந்ததில்லை.

எனவே 30 வருட கால ஆயுதப்போராட்டத்தை தமிழினம் தவிர்க்கமுடியாது கையில் எடுத்தனர். இன்று உலக வல்லரசுகளின் சூட்சிகளினாலும் இரும்பு பிடிக்குள்ளும் தமிழர் விடுதலைப் போராட்டம் சிக்குண்டு சிதறிப்போனது. இன்றும் தமிழர் விடுதலை வேட்கை தமிழர் மனதில் ஓயவில்லை.

அவர்கள் ஜனநாயக ரீதியில் தமது உரிமைகளை முன்னேடுத்து தற்போதைய இலங்கையரசின் அரசியல் யாப்பினூடாக வெற்றி கொள்ள எதிர்பார்க்கின்றனர்.

மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்குபற்றுதலுடன் மதுரை மீடியா பிலிம்ஸ் ஸ்ரடிஸ் அக்கடமியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.