Breaking News

முதலமைச்சர் திட்டிய விவகாரம் – கடற்படையின் அறிக்கை ஜனாதிபதியிடம்

சம்பூரில் நடந்த விழாவில், இலங்கை கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடுமையாக திட்டிய விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை, பாதுகாப்பு அமைச்சிடம் செய்துள்ள முறைப்பாட்டை, ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் நாள் நடந்த ஆய்வுகூட திறப்பு விழாவில், சம்பூரில் உள்ள விதுர கடற்படைத் தளத்தின், கட்டளை அதிகாரியான கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை, கிழக்கு மாகாண முதலமைச்சர் முட்டாள் என்று கடுமையாகத் திட்டியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக,  கடற்படை விசாரணை நடத்தி, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இந்த அறிக்கை நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை தாம் ஆராய்ந்து விட்டு, ஜனாதிபதியின் ஆலோசனைக்காக உடனடியாக அவரிடம் சமர்ப்பித்து விட்டதாக, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ மறுத்துள்ளார். விருந்தினர்களை மேடைக்கு அழைப்பது தொடர்பான நெறிமுறைகளை அறியவில்லை என்று ஆளுனரையும், முதலமைச்சர் நசீர் அகமட் விமர்சித்திருந்தார்.

இதனிடையே, சம்பூர் கடற்படை முகாம் கட்டளை அதிகாரி கப்டன் பிரேமரத்ன,  கடற்படைத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, நேற்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, அறிக்கை ஒன்றை, பாதுகாப்புச் செயலரிடம் கையளித்ததாக கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக  பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன், தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்திய அமைச்சர் ஹக்கீம், தாம் முதலமைச்சர் நசீரிடம் இதுபற்றி விசாரித்ததாகவும், இந்தச் சம்பவத்துக்காக அவர் உளப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

கடற்படை அதிகாரி மீது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக முதலமைச்சர் வருத்தம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட அவர், சில தரப்புகள், முஸ்லிம் காங்கிரசுக்கும் கடற்படைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த முனைவதாகவும், இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.