Breaking News

தந்திரோபாய நடவடிக்கை - செ.சிறீதரன்


ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்த பின்னர் உத­ய­மா­கிய நீதிக்­கான நிலை­மாற்றுக் காலம் படிப்­ப­டி­யாகக் கரைந்து சென்று கொண்­டி­ருக்­கின்­றது.
ஆயுத மோதல்­க­ளின்­போது பல வழி­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சரி­யான நீதி வழங்­கப்­ப­டு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் இந்தக் காலத்தில் வழங்­கப்­பட வேண்டும். அத்­துடன், அத்­த­கைய பாதிப்­புக்கள் மீண்டும் நிக­ழாமல் இருக்க வேண்டும் என்ற உத்­த­ர­வாதம் நடை­மு­றையில் கைக்­கொள்­ளப்­பட வேண்டும்.

அத்­த­கைய உத்­த­ர­வா­த­மா­னது, நிரந்­த­ர­மா­னதோர் அர­சியல் தீர்­வாக அமைய வேண்டும் என்­பது நீதிக்­கான நிலை­மாற்றுக் காலத்தின் முக்­கிய குறிக்கோள், அதி முக்­கிய எதிர்­பார்ப்­பாகும்.

அர­சியல் முரண்­பாட்டின் விளை­வாக எழுந்த ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்­ததன் பின்னர், நாட்டில் நிலை­யான அமை­தியை நிலை­நாட்ட வேண்­டிய தேவை, மோதல்­களில் ஈடு­பட்­டி­ருந்த இரு தரப்­பி­ன­ருக்கும் தவிர்க்க முடி­யா­த­தா­கி­யி­ருக்­கின்­றது.

இந்த நிலை­யான அமை­தி­யா­னது, உண்மை, நீதி, நிவா­ரணம், மீள்­நி­க­ழாமை என்ற நான்கு தூண்­களில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும் என்­பது இரா­ஜ­தந்­தி­ரிகள், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களின் முடி­வாகும்.

மோதல்­க­ளின்­போது அல்­லது மோதல்கள் இடம்­பெற்ற காலத்தில் உண்­மை­யா­கவே என்ன நடந்­தது என்ற உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும். அந்த உண்­மையின் அடிப்­ப­டையில் நீதி வழங்­கப்­பட வேண்டும். நிலை குலைந்து போயுள்ள பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் மறு­வாழ்­வுக்­கு­ரிய நிவா­ரணம் வழங்­கப்­பட வேண்டும். எல்­லா­வற்­றுக்கும் மேலாக இத்­த­கைய பாதிப்­புக்கள் மீண்டும் நிக­ழாமல் உறுதி செய்­யப்­பட வேண்டும் என்று, நிரந்­த­ர­மா­னதோர் அமை­திக்­கான நான்கு தூண்­களின் செயற்­பா­டாக நிரந்­தர அமைதி சமா­தா­னத்­திற்­கான நிபு­ணர்கள், செயற்­பாட்­டா­ளர்­க­ளினால் வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதனை வேறு வார்த்­தை­களில் கூறு­வ­தானால் - ஆயுத மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­பவை தொடர்பில் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தொரு நியா­ய­மான விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும். அந்த விசா­ரணை வெளிப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் நிரந்­த­ர­மான அமை­தியை நிலை­நாட்டும் வகையில் ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும். இந்தப் பொறுப்­பினை அர­சாங்கம் சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் நிறை­வேற்ற வேண்டும் - என குறிப்­பி­டலாம்.

யுத்த மோதல்கள் முடி­வுக்கு வந்­த­பின்னர், கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக இந்த விட­யங்கள் பல்­வேறு வழி­களில் பலப்­பல விதங்­களில் பேசப்­பட்­டி­ருக்­கின்­றன. விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. உள்­ளூரிலும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையை மையப்­ப­டுத்தி சர்­வ­தேச மட்­டத்­திலும் பல தரப்­பி­ன­ராலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றன. தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்ற இந்த நட­வ­டிக்­கை­களின் ஒரு முக்­கி­ய­மான கட்­ட­மாக எதிர்வரும் ஜுன் மாதத்தில் இடம்­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் அமர்வு கரு­தப்­ப­டு­கின்­றது.

இத­னை­யொட்டி, நாட்டில் நிரந்­தர அமை­தியை உரு­வாக்­கு­ம் நோக்கில், முதற்­ப­டி­யாக காணாமல் போனோ­ருக்­கான நிரந்­தர செய­லகம் ஒன்றை அமைப்­ப­தற்­கு­ரிய சட்ட வரைபை அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­தி­ருக்­கின்­றது.

நீதிக்­கான நிலை­மாற்­றத்தின் நம்­பிக்­கைக்­கு­ரிய பொறி­மு­றையின் முதற்கட்ட நட­வ­டிக்­கை­யாக இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாக அர­சாங்கம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. இது, மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறும் செயற்­பாட்டின் உறு­தி­யா­ன­தொரு நட­வ­டிக்­கை­யாகும் என்றும் அர­சாங்கம் குறித்து காட்­டி­யி­ருக்­கின்­றது.

காணாமல் போனோ­ருக்­கான நிரந்­தர செய­லகம்

காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் எத்­த­கை­ய­தாக அமைந்­தி­ருக்கும் என்­பது குறித்து அர­சாங்கம் விப­ரங்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. காணா­மற்­போன ஆட்கள் அலு­வ­லகம் என்ற சொற்­ப­தத்­தினால் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தைக் குறித்துக் காட்­டி­யுள்ள அர­சாங்கம் அது ஒரு நீதித்­துறை பொறி­மு­றை­யல்ல என்­பதைத் தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. ஆயினும், இந்த அலு­வ­ல­கத்தின் நட­வ­டிக்­கை­களின் மூலம் வெளிப்­ப­டு­கின்ற நிலை­மை­க­ளா­னவை மற்­றொரு பொறி­மு­றையால் கவ­னிக்­கப்­படும் என்று கூறி­யி­ருக்­கின்­றது.

'எவ்­வா­றா­யினும் காணா­மல்­போன ஆட்­க­ளுக்­கான அலு­வ­ல­க­மா­னது, நீதிக்­கான பாதிக்­கப்­பட்­ட­வரின் உரி­மையில் எவ்­வ­ழி­யிலும் தடங்­க­லாக இருக்­க­மாட்­டாது. காணா­மல்­போன ஆட்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்­திற்கு முன்னே தோன்றும் எல்லா பாதிக்­கப்­பட்­ட­வர்­களும், ஒரு வழக்­குத்­தொ­டுக்கும் அதி­கா­ர­ச­பையின் முன்னே தோன்றி நீதியை நாடு­வ­தற்­கான, அவர்­க­ளது பாரா­தீ­னப்­ப­டுத்த முடி­யாத உரிமை குறித்து அவர்­க­ளுக்கு அறி­விக்­கப்­படும்.

'பாதிக்­கப்­பட்­ட­வரின் அறி­வ­தற்­கான உரி­மைக்­காக காணா­மல்­போன ஆட்­க­ளுக்­கான அலு­வ­லகம் செயற்­படும் என்­ப­துடன், ஒரு நீதி­மன்­றத்தைப் போன்று குற்­றத்தை நிரூ­பிப்­பதை நோக்கி விசா­ர­ணை­களில் கவனம் செலுத்­தப்­ப­ட­மாட்­டாது. காணா­மல்­போன ஆளின் கதியைக் கண்­டு­கொள்­வதன் மீதே கவனம் செலுத்­தப்­படும். பய­னுள்ள தக­வல்­களை வெளிப்­ப­டுத்தும் நம்­பிக்­கையில், காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்­திற்கு வெளிப்­ப­டுத்­தப்­படும் இர­க­சி­யங்­க­ளுக்­கான பாது­காப்பை இந்த அணு­கு­முறை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­கின்­றது.'

கிட்­டத்­தட்ட காணாமல்­போ­ன­வர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை ஒத்­த­தா­கவே காணாமற் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­களும் அமைந்­தி­ருக்கும் என்று எண்ணத் தோன்­று­கின்­றது. ஆனால், அந்த ஆணை­க்­கு­ழுவின் செயற்­பா­டு­களில் இருந்து இந்த அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டுகள் வேறு­பட்­டி­ருக்கும் என்று அர­சாங்கம் உறு­தி­யாகக் கூறு­கின்­றது.

'ஒரு சந்­தே­கத்­திற்­கு­ரிய குற்­றச்­செயல் இருக்­கு­மாயின், காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­க­மா­னது, உரிய குற்­ற­வியல் விசா­ர­ணையை மேற்­கொள்ளும். உரிய அதி­கா­ர­ச­பைக்கு, காணா­மற்­போன ஆளின் சிவில் நிலைத் தக­வல்­களை அறி­விக்கும். சாட்­சி­களின் சாட்­சி­யங்­களும் அவர்­களின் இணக்­கத்­துடன் உரிய அதி­கார சபைக்கு அனுப்­பப்­படும்.

ஒரு சவக்­குழி மீதான அகழ்வை மேற்­கொள்­வ­தற்கு உரிய நீதி­வானால் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்டால் அல்­லது ஒரு சட்ட அமு­லாக்கல் அதி­கார சபையால் ஒரு தேடு­தலை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்டால், இந்த மேல­திக விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளா­னவை வழக்குத் தொடுக்கும் அதி­கார சபை­யி­னாலும் பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும்' என்றும் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து அர­சாங்கம் வெளி­யிட்­டுள்ள தக­வல்­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நாட்டின் நிரந்­தர அமை­திக்­கான நான்கு அம்ச செயற்­பா­டு­களில் ஒன்­றா­கிய காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை நிறுவும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணை­ய­கத்தின் ஜுன் மாத அமர்­வு­களைக் கவ­னத்திற் கொண்டே மேற்­கொண்­டி­ருக்­கின்­றது என்­பதில் எந்­த­வி­த­மான சந்­தே­க­மு­மில்லை.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறு­கின்ற செயற்­பாட்டை உளப்­பூர்­வ­மாகச் செயற்­ப­டுத்­து­வ­தாக இருந்தால், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் அளித்த உறு­தி­மொ­ழிக்கு அமை­வான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உட­ன­டி­யா­கவே தொடங்கிச் செயற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

மே மாதத்தின் இறு­தியில் ஜுன் மாதம் பிறப்­ப­தற்கு சில நாட்­களே உள்ள நிலை­மை­யி­லேயே அர­சாங்கம் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றி­ருக்­கின்­றது. இந்த அங்­கீ­கா­ரத்தைத் தொடர்ந்து காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்­கு­ரிய சரி­யான இறுதி சட்ட வரைபு எப்­போது தயா­ராகும், அது எப்­போது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு சட்­ட­மாக்­கப்­படும் என்­பது தெளி­வற்­ற­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­வ­தற்­காக விசா­ரணை பொறி­மு­றை­யொன்றை நிறு­வு­வதில் அர­சாங்கம் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­வ­தாக சர்­வ­தே­சத்­திற்குக் காட்­டு­வ­தற்­கான ஒரு தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கை­யா­கவே இதனை நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. பிரச்­சி­னை­களைத் தீர்க்க வேண்டும். உண்­மை­யான நிரந்­தர அமை­தியை நோக்­கிய உளப்­பூர்­வ­மான செயற்­பா­டாக இதனை நோக்க முடி­ய­வில்லை.

தமிழ் அர­சியல் தரப்பின் செயற்­பா­டுகள்

யுத்த மோதல்கள் முடி­வுக்கு வந்து ஏழு வரு­டங்­க­ளா­கின்­றன. ஆயினும் மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கு­ரிய நீதி வழங்­கப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்டு இடம்­யெர்ந்த மக்­களை மீள்­கு­டியேற்­று­வதில் உள்ள சிக்­கல்­க­ளுக்கு இன்னும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. அதே­நேரம் தேசிய பாது­காப்பைக் காரணம் காட்டி, யுத்­த­மோ­தல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் பொது­மக்­களின் காணி­களை, முப்­ப­டை­யி­னரின் தேவை­களுக்­காக அப­க­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் தடங்­க­லின்றி தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

ஏற்­க­னவே படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட காணி­களை, அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைத்து அவர்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் ஆமை வேகத்­தி­லேயே இடம்­பெற்று வரு­கின்­றன. அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் ஏனோ­தானோ என்ற போக்­கி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது.

பொறுப்பு கூறும் விட­யத்தில் கவனம் செலுத்தி அர­சாங்கம் தனக்கு இசை­வான முறை­யி­லேயே, நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதே­நேரம், சர்­வ­தே­சத்­திற்கு முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களில் தான் ஈடு­பட்­டி­ருப்­ப­தாகக் காட்­டிக்­கொள்­வ­திலும் சாது­ரி­ய­மான நகர்­வு­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இந்தச் சூழ்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­க­ளான தமிழ் அர­சியல் தரப்­பி­னரின் செயற்­பா­டுகள் திருப்­தி­ய­ளிக்­கத்­தக்க வகையில் காணப்­ப­ட­வில்லை என்­றே பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் கரு­து­கின்­றனர்.

சர்­வ­தேச விசா­ரணை பொறி­மு­றையே வேண்டும் என்­பதில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு மிகவும் உறு­தி­யாகச் செயற்­பட்­டி­ருந்­தது. கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த அர­சியல் உறுதி நிலைமை வைரம் பாய்ந்­த­தாகக் காணப்­பட்­டது என்றே கூற வேண்டும். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், இது விட­யத்தில் மிகவும் இறுக்­க­மான கொள்கைப் பிடிப்­போடு செயற்­பட்­டி­ருந்தார். அதற்­காக அவர் உறு­தி­யாகக் குரல் கொடுத்து வந்­தி­ருந்தார்.

ஆயினும் ஆட்சி மாற்­றத்தின் பின்னர், சர்­வ­தேச விசா­ர­ணையே தேவை என்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் உறுதி நிலை நீரில் நனைந்த களி­மண்­ணாகத் தளர்ந்து போயுள்­ளது. சர்­வ­தேச விசா­ரணை அவ­சி­ய­மில்லை. உள்­ளக விசா­ர­ணையே நடத்­தப்­படும் என்று நல்­லாட்­சிக்­கான புதிய அர­சாங்கம் எடுத்த நிலைப்­பாட்டை கூட்­ட­மைப்பு ஏற்­றுக்­கொண்­டு­விட்­டது.

சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­திய சர்­வ­தே­சமும், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையும் அர­சாங்­கத்தின் கோரிக்­கையை ஏற்று உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றைக்கு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தமை வேறு விடயம். ஆயினும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இறுக்­க­மாகச் செயற்­பட்­டி­ருக்க வேண்டும் என்­பதே பாதிக்­கப்­பட்ட மக்­களின் கருத்­தாகும்.

அர­சாங்­கத்தின் கோரிக்­கையை ஏற்று உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­மைக்கு பச்சைக் கொடி காட்­டிய ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை, கலப்புப் பொறி­முறை அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. அதனை ஏற்­ப­திலும் அர­சாங்கம் பின்­ன­டித்­த­போது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கே ஆத­ர­வான நிலைப்­பாட்டில் இருந்­தது. அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை ஆத­ரித்து நியா­யப்­ப­டுத்தும் போக்­கையே அது கைக்­கொண்­டி­ருந்­தது.

புதிய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இருப்­பது வேறு. பாதிக்­கப்­பட்ட மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காகச் செயற்­ப­டு­வது வேறு. தாயும் பிள்­ளை­யா­னா­லும்­கூட, வாயும் வயிறும் வேறல்­லவா? தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தின் மீதான அதீத நம்­பிக்கை வைத்துச் செயற்­ப­டு­வ­தாக தமிழ் மக்கள் எண்ணத் தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள். தமிழ் மக்­க­ளுக்­கா­கவே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புச் செயற்­ப­டு­கின்­றது. பாடு­ப­டு­கின்­றது என்­ப­தெல்லாம் சரி. ஆனால் அவ்­வாறு அது செயற்­ப­டு­கின்­றது என்­பது மக்­க­ளுக்குத் தெரி­ய­வேண்டும். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அவ்­வாறே செயற்­ப­டு­கின்­றது என்­பதை அவர்கள் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க வகையில் நடக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் பங்­க­ளிப்பு

நிரந்­தர அர­சியல் தீர்வை நோக்­கிய பய­ணத்தில் எடுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் அனைத்­திலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நேரடி பங்­க­ளிப்பு இருப்­பது அவ­சியம். விசா­ரணைப் பொறி­மு­றையோ அல்­லது வேறு எது­வாக இருந்­தாலும், அந்தக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கும்­போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் கருத்­துக்கள் மற்றும் எண்­ணங்கள் உள்­வாங்­கப்­ப­டு­வது அவ­சியம் என்று சர்­வ­தேசம் வலி­யு­றுத்­து­கின்­றது. காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை உரு­வாக்கும் விடயம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி இத்­த­கைய கருத்து உள்­வாங்­க­லுக்­கான சந்­திப்பு ஒன்று வெளி­வி­வ­கார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது.

காணாமல் போனோரின் உற­வி­னர்­க­ளான 65 பேர் வரையில் இந்தச் சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்­தனர். வடக்கு, கிழக்கு மாத்­தி­ர­மன்றி, கொழும்பு மற்றும் தென்­ப­கு­தியைச் சேர்ந்­த­வர்­க­ளான படை­வீ­ரர்­களின் குடும்­பத்­தி­னரும் இதில் இடம்­பெற்­றி­ருந்­தனர். காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை உரு­வாக்கும் விட­யத்தில் அப்­போது அவர்கள் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

அர­சாங்கம் அமைக்­க­வுள்ள காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை உரு­வாக்­கு­வது தொடர்பில் அர­சாங்கத் தரப்பில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்த உத்­தேச ஆலோ­ச­னை­களில் பல­வற்றில் அவர்கள் திருத்தம் வேண்டும் என்று கோரி­யி­ருந்­தனர். சிவில் அமைப்­பி­ன­ரு­டைய முன் முயற்­சி­யி­லேயே இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது.

ஆனால் அர­சியல் மட்­டத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கருத்­துக்கள் தமிழ் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளினால் வெளி­வி­வ­கார அமைச்­சிடம் காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை உரு­வாக்கும் விட­யத்தில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டதா என்­பது தெரி­ய­வில்லை. அர­சியல் தலை­வர்­களின் ஏற்­பாட்டில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் அல்­லது அந்தக் குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள், அரச தரப்­பி­னரைச் சந்­தித்து நேர­டி­யாகத் தங்­க­ளு­டைய கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்லை.

பாதிக்கப்பட்ட மக்களினால் வெளிவிவகார அமைச்சு சந்திப்பில் நேரடியாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் உத்தேச திட்ட ஆலோசனைகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பது தெரியாமல், அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சிவில் அமைப்பினரும், காணாமல் போனோரின் உறவினர்களும் கவலையடைந்திருக்கின்றனர். அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகப் பொறிமுறைக்கான வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் காணாமல் போனோரின் உறவினர்களும், அவர்களுடைய பங்களிப்புக்காகச் செயற்பட்டிருந்த சிவில் அமைப்பினரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்படைந்திருக்கின்றனர். இந்த விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேரடியாகப் பங்கேற்றிருந்தால், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை அந்த வரைபில் உள்ளடக்குவதற்கு வசதியாக இருந்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகின்றது.

மொத்தத்தில் காலம் கரைந்து கொண்டிருக்கின்றது. நீதிக்கான நிலைமாற்றுக் காலத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டியதுடன், நிலைமாற்றுக் காலத்தின் பலாபலன்களை உச்ச அளவில் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதற்குரிய முயற்சிகள் முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்கின்றது.

அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 2016 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு எட்டப்படும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ள நிலையில் (அது அவருடைய கணிப்பாகவும் இருக்கலாம்) அந்த எதிர்பார்ப்பை சீராக நிறைவேறுவதற்குரிய செயற்பாடுகளில் சிவில் அமைப்புக்களானாலும் சரி எந்த பொது அமைப்புக்களானாலும் சரி அவற்றுடன் நெருங்கிக்கை கோர்த்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அர்த்தமுள்ள வகையில் செயற்பட வேண்டும். இது காலத்தின் தேவையாகும். காலம் கடந்த பின்னர் கவலைப்பட நேரிடலாம். எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வது நல்லதல்லவா?