Breaking News

ஊழல் மோசடிகள் விசாரணை துரிதம்! இவ்வார அரசியல் கண்ணோட்டம்



மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்தவர்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கடந்த இரண்டு வாரங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச எம்.பி.யின் செயலாளர் ஒருவரின் வீட்டிலிருந்து பத்து கிலோ தங்கம் பொலிஸாரால் கடந்த 26ம் திகதி கைப்பற்றப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பொரலஸ்கமுவயிலுள்ள குறித்த செயலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஹலியவுக்கு 20 கோடி ரூபா வழங்கியது குறித்து லலித் வீரதுங்கவிடம் விசாரணை

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு 2012ம் ஆண்டு வைத்திய சிகிச்சைக்காக 20கோடி ரூபா வழங்கியது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் பாரிய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு கடந்த வாரம் விசாரணைகளை மேற்கொண்டது.

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கீழே விழுந்து கால் முறிவுக்குள்ளானார். குறித்த பணத்தொகை அப்போது அவரது சிகிச்சைக்காக வழங்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்கிஸ்ஸ காணி விவகாரம் தொடர்பாக யோஷித்தவின் பாட்டியிடம் விசாரணை.

கல்கிஸ்ஸ பிரதேசத்திலுள்ள ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள் தொடர்பாக பொலிஸ் பாரிய நிதி மோசடிப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் படி யோஷித்த ராஜபக்சவின் பாட்டியின் பெயரில் மேலும் 14 காணிகள் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அவர் பாரிய நிதிமோசடிப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த காணிகளை கொள்வனவு செய்வதற்காக எவ்வாறு பணம் கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு முதலீடு செய்தது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் யோஷித்த ராஜபக்ச தரப்பில் வெளியான விடயங்களை அடிப்படையாக கொண்டு யோஷித்த ராஜபக்ச தாய்வழிப் பாட்டியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழா கலை நிகழ்ச்சிகள் தொடர்பாக நடிகர் ஜக்சன் அந்தனியிடம் விசாரணை

மஹிந்த ஆட்சியில் அம்பாந்தோட்டை துறைமுக நீர் நிரப்பும் வைபவம் மற்றும் துறைமுக திறப்பு விழா வைபவத்துக்கு நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு 113 மில்லியன் ரூபா செலவிட்டு நிதி முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக பிரபல சிங்கள திரைப்பட நடிகர் ஜக்சன் அந்தனியிடம் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நன்னீர் திருவிழா என்ற பெயரில் இந்த நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்காக ஜக்சன் அந்தனியின் செலக்னா நிறுவனத்துக்கு 20 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியவந்துள்ளது.

காசோலை கொடுக்கல் வாங்கல் முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத் மீது விசாரணை

மஹிந்த ஆட்சியின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனவிரத்ன கடந்த வாரம் பொலிஸ் பாரிய நிதி மோசடிப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பஸில் ராஜபக்சவின் காணி விவகாரம் தொடர்பாக உபுல் திசாநாயக்க கைது

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் கம்பஹா ஒருதொட்ட பிரதேசத்தில் காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக டி.ஏ.ராஜபக்ச மன்றத்தின் உப தலைவர் உபுல் திசாநாயக்க பொலிஸ் பாரிய நிதி மோசடிப் பிரிவினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

அந்த மன்றத்திற்காக பத்து மில்லியன் ரூபா பெறுமதியான காணி குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த ஆட்சியிலும் பதவிகள்

மஹிந்த ஆட்சிக்காலத்தில் ஊழல் மோசடி நிதிமுறைகேடுகளில் சம்பந்தப்பட்டோருக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது குறித்து இந்த அரசை பதவிக்கு கொண்டுவர உழைத்தோர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அயராது உழைத்த நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு ஊழல் மோசடி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நல்லாட்சி அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பது குறித்து பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்காததுடன் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த அரசு பதவி வழங்கியுள்ளது குறித்தும் இந்த அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

சஜின்வாஸ் குணவர்தன அமைப்பாளராக நியமனம்

மஹிந்த ராஜபக்கஷ ஆட்சியில் செல்லப்பிள்ளையாகவும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராகவும் இருந்தவர் சஜின்வாஸ் குணவர்தன.

இவர் அந் நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பிரிட்டன் சென்ற போது பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் டாக்டர் கிறிஸ் நோனிசை கன்னத்தில் அறைந்து சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

மஹிந்த ஆட்சியில் சஜின்வாஸ் குணவர்தன எம்.பி. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 32 வாகனங்களை முறைகேடாகப் பெற்று பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் இவருக்கு சொந்தமான பெற்றோல் நிலையங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாவுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் பெற்ற பெற்றோல், டீசல் மற்றும் எரிபொருளுக்கு பணம் வழங்காதது குறித்து இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடரப்பட்டதும் இவர் அந்த நிலுவை பணத்தை மீளச்செலுத்தினார்.

இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட இவருக்கு அரசு பாதுகாப்பு வழங்குகிறது. இதற்கு மேலாக ஸ்ரீ.ல.சு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவரை பலபிட்டிய தொகுதியின் ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளராக நியமித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அனுஷ பெல்பிட்டவின் நியமனம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை

மஹிந்த ஆட்சியில் தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் இவர் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக விருந்தார்.

தொலை தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக அனுஷ பெல்பிட்ட இருந்தபோது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை பதவி வழி உறுப்பினராகவிருந்தார்.

இவர்கள் இருவரும் ஜனாதிபதித் தேர்தலின்போது 600 கோடி ரூபாவுக்கு பௌத்தர்களுக்கு வழங்கவென (சில் துணி) கொள்வனவு செய்தது தொடர்பாக இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

அனுஷ பெல்பிட்ட லலித், வீரதுங்க இருவரும் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வெள்ளைப்புடவை மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக பௌத்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இதேவேளை அனுஷ பெல்பிட்ட கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தெற்காசியாவின் உயர்ந்த தரமான கோபுரம் நிர்மாணிப்பதிலும் மோசடி செய்துள்ளார் என்று ஊழல் மோசடிக்கு எதிரான இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் அனுஷ பெல்பிட்டவை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமித்துள்ளது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் ஏற்ற முன்னின்று உழைத்த நல்லாட்சிக்கான இயக்கம், ஊழல் மோசடிக்கு எதிரான இயக்கம், கபே அமைப்பு ஆகியன இந்நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.

அரச நிர்வாக சேவை ஒழுக்க நெறி கோவையின் படி ஒரு மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு அரச நியமனம் வழங்க முடியாதெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சம்பூர் சம்பவம் இனவாதமாகிறது

திருகோணமலை சம்பூர் மகாவித்தியாலய வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நடந்து கொண்ட விதம் இன்று இனவாதத்தைத் தூண்டும் வகையில் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கிளிநொச்சி பரவி பாஞ்சான் இராணுவ முகாமுக்குள்ளிருக்கும் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட வீடு, காணிகளை பார்க்கச் சென்ற சம்பவம் தென்னிலங்கையில் இனவாதமாக்கப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகளையும், வீடுகளையும் வந்து பார்க்கும் படி மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றார். இதை தென்னிலங்கை இனவாதிகள் ஊதிப் பெருப்பித்து விட்டனர்.

இப்போது கிழக்கு மாகாண முதலமைச்சரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். அவர் நடந்து கொண்ட விதத்தை தென்னிலங்கை எதிரணி அரசியல் வாதிகளும் இனவாதிகளும் இனவாதக் கண்ணோட்டத்தில் விமர்சித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சரும் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்திருந்தால் தென்பகுதியில் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுமா?

கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது பிரதேசத்திலுள்ள சம்பூர் வித்தியாலய வைபவத்துக்குச் சென்றுள்ளார். இந்தப் பாடசாலை கடற்படையினர் வசமிருந்துள்ளது.

இப்பாடசாலையை கடற்படையினர் இவ்வருடம் மார்ச் மாதம் 25ம் திகதியே மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன்.இப் பாடசாலை மாகாண சபையின் நிர்வாகத்துக்கு கீழ் வருகின்றது.

ஆனால் கடற்படையினர் ஏற்பாடு செய்த இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண கல்வி அமைச்சரும் மூன்றாம் மனிதர்களைப் போல் மேடைக்குக் கீழ் மக்களுடன் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

மேடையில் கிழக்கு மாகாண சபை ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அட்டுல் நேஷாப் ஆகியோர் இருந்தனர்.

படையினர் மக்களுடன் நெருக்கமாக புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர் என்பதை அமெரிக்காவுக்கு பறைசாற்றுவதே இந்த வைபவத்தின் நோக்கமாக இருந்ததென அங்குள்ள புத்திஜீவிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

படையினர் 500 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப் பைகளையும், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் சிலவற்றுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கியதாகக் கூறப்படுகின்றது. ஆளுநரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இந்த சம்பூர் மகா வித்தியாலயம் இயங்குகின்றது. ஆனால் வைபவத்தை படையினரும் ஆளுநரும் நடத்துகின்றனர். இது சொந்த வீட்டில் அயலவர்கள் புகுந்து அடாவடித்தனம் செய்வது போலாகுமென்பதே மாகாண சபை நிர்வாகத்தினரின் கருத்தாக இருக்கின்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோ, மேடைக்கு கீழ் அமர்ந்துள்ள முதலமைச்சர் ஹாபீஷ் நாஸிரை மாணவர்களுக்கு பரிசு வழங்க மேடைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மேடையை நோக்கிச் சென்றபோது கடற்படை அதிகாரி அவர்களை மறித்துள்ளார்.

இந்த நிலையில் தான் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்ததாக முதலமைச்சர் தெரிவிக்கின்றார்.

மஹிந்த ஆட்சியில் தூதுவரை பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாடொன்றில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்தது. அது பெரிதுபடுத்தப்படவில்லை.

ஆனால் இந்த ஆட்சியில் இனவாதிகள் இச்சம்பவங்களை ஊதிப் பெருப்பிக்கின்றனர். இதுவும் நல்லாட்சியை சீர்குலைக்கும் செயலாகவே கருதப்படுகின்றது.