Breaking News

இருப்பது இடதுகை மட்டும்தான் – ஜெரா



அந்தத் தெரு முனையில் புள்ளியாகி மறையும் வரை சைந்தவி பார்த்துக்கொண்டிருந்தாள். அதிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் இருந்த நிரோசனின் வீட்டுக்கு முகவரி சொல்லியிருந்தார் சைந்தவியின் அப்பம்மா. அவர் சொன்ன முகவரியின்படி நிரோசனின் வீட்டையும் கண்டுபிடித்தேன்.

நிரோசனின் அம்மா, கிடுகி பின்னிக்கொண்டிருந்தார். அப்பா ஏதோ இயந்திரம் ஒன்றை திருத்திக்கொண்டிருந்தார். ஓலைக்கொட்டில் குசினிக்குள், நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான் நிரோசன்.

என்னை விசாரித்து, தங்கள் வீட்டு விறாந்தைக்கு அழைத்துப்போனார்கள். உடையாத பிளாஸ்ரிக் கதிரையொன்றை தந்தார் நிரோசனின் அப்பா.

மகன் இப்பத்தான் ரியுசனால வந்தவர். சாப்பிடுறார். எங்கட கதையள் பெரிசு. ஆனா அதை எதையும் நாங்க இப்ப நினைக்கிறதில்ல. நினைச்சி வீண் கவலதானே..” அந்த விறாந்தையில் சிதறிக்கிடந்த குப்பைகளை ஒழுங்குபடுத்தியபடி நிரோசனின் அம்மா சொல்லிக்கொண்டு போனார். அவரின் பேச்சுக்கு நிறுத்தம் வந்ததும்,

“2009 ஆம் ஆண்டு, சித்திர மாசம் 21 ஆம் தியதி. ஆமிட்ட போறதுக்காக நிறைய சனங்கள் எங்கடதறப்பாள் கொட்டில் ஓரமா குவிஞ்சி இருந்ததுகள். அது வலையன்மடம் என்னப்பா..” தான்சொல்வது சரிதானா என்பதை மனைவியைக் கூப்பிட்டு உறுதிப்படுத்திக்கொண்டார் நிரோசனின்அப்பா.

“ஓம்..ஓம்.. இரவு 8 மணியிருக்கும்..”நிரோசனின் அம்மா சொன்னவுடன் தொடர்ந்தார் அவனின் அப்பா.

“ அந்த நேரம் ஷெல் அடிக்கத் தொடங்கீ்ற்றாங்கள். அங்கங்க ஒரே ஷெல்லுகள் விழுந்து வெடிக்குது. சனமெல்லாம் கதறுது. நாங்கள் அப்ப சமைச்சிக்கொண்டிருந்தம். நிரோசனும் தங்கச்சியும் பங்கருக்குள்ள ஓடிட்டினம். அப்பிடி வந்த ஷெல்லுகளில ஒண்டு அவையள் இறங்கின பங்கர் வாசலிலயே விழுந்து வெடிச்சிற்று. அந்த பங்கர் வாசல்ல இருந்த 4 பேர் அதிலயே சிதறிட்டினம். அவைக்கு முன்னுக்கு இருந்த நிரோசன் கையில காயப்பட்டிட்டார்..“ அப்பா சொல்லி முடிக்கையில், நிரோசன் அந்த விறாந்தைக்குள் உள்நுழைகின்றான்.

இப்போதுதான் அவன் முன்யௌவனத்தை நெருங்குகின்றான். அவனுக்கு அரும்புமீசையும், விரிகிற தோளும் அழகாய் இருக்கிறது. சற்றும் வளையாத, நடுக்கமற்ற முள்ளந்தண்டு, அவனது நடைக்கு கதாநாயகத்தனத்தைக் கொடுக்கின்றது.

“..எனக்கு காயப்பட்ட உடன எதுவும் தெரியேல்ல. வெடிச்ச சத்தத்தில காதெல்லாம் அடைச்சிற்று. கையில சூடான தண்ணிய ஊத்தின மாதிரி இருந்தது. ஒரு நோவும் இல்ல. மற்றக் கையால தொட்டுப் பார்த்தன் ரத்தம். உடம்பெல்லாம் ஒரே ரத்தம். பிசுபிசு எண்டு ஒட்டுது. அப்பத்தான் கொஞ்சம் வலிக்கத்தொடங்கிச்சுது. அதை உணரக்குமுதல்ல கண்ணெல்லாம் இருட்டிட்டுது. அடுத்த நாள் காலையிலதான் கண் முழிச்சன். அப்ப, அம்மா, தங்கச்சி எல்லாம் சுத்தி நிண்டு அழுது கொண்டிருக்கினம். ஏன் அழுகினம் எண்டு தெரியேல்ல. கைய ஊண்டி, எழும்பினன்.

ஒரு கை சுளீர் எண்டு வலிச்சது. அய்யோ எண்டு கத்தினன். அப்பா, அம்மா ஓடிவந்து தாங்கிக்கொண்டிச்சினம். பிறகுதான் பார்த்தன், என்ர ஒரு கையக் காணேல்ல. வெட்டியிருந்திச்சினம்.

கதறியழுதன்..” அவனின் கண்களில் இப்போதும் அந்தக் கண்ணீர் கசிந்திருந்தது. விறாந்தைக்குள் வந்த வேகத்தில், தன் அப்பா சொன்ன முள்ளிவாய்க்கால் நினைவை தொடர்ந்து சொன்ன நிரோசேன், விம்மத்தொடங்கினான்.

அம்மா அழுதுகொண்டே வீட்டின் உள்ளே சென்றார். அப்பா அமைதியாக இருந்தார்.

விம்மல் சத்தத்தை மறைக்க அப்பா பேசத் தொடங்கினார்.

“..நிரோசனின் கைய வெட்ட வேண்டி வந்திருக்காது. கை சிதறிப்போச்சு. எலும்பெல்லாம் சிதறிட்டு. நொருங்கீற்று, அதுக்கேற்ற மருந்துகள் அப்ப அங்க இல்லத்தானே. இயக்கம்தான் மருந்து கட்டினது. அதாலதான் கைய வெட்ட வேண்டி வந்திற்று..”

இப்ப படிக்கிறீங்களா நிரோசன் – விம்மல் குறைகிறே நேரம்பார்த்து கேள்வியைக் கேட்டேன்.

“ஓம். இப்ப ஓ.எல் தேர்ட் சை எடுக்கிறன் (சாதாரணதரப் பரீட்சையை மூன்றாந்தடவையாக படிக்கிறார்)

முதல் ரெண்டு சையும் காணாது..”

ஏன் படிக்கேல்லயா?

“..இல்ல நல்லத்தான் படிச்சன். கை எனக்கு பெரிய பிரச்சினைய தருது. நான் வலக்கையாலதான் சின்னனில இருந்து எழுதினன். 10 வயசில காயப்பட்டதோட பிறகு 7 ஆம் ஆண்டிலதான் படிக்கத் தொடங்கினன். இடையில 2 வகுப்புகள் படிக்கவே இல்ல..”

“..படிக்கத் தொடங்கினதும்தான் இடக்கையில எழுதப் பழகினன். கஸ்ரமாயிருந்தது. ஆனாலும் பழகீற்றன். எக்சாம் நேரத்தில என்னால வேகமா எழுத ஏலாமல் இருக்கும். மனப் பதற்றம். விடை சரியா எழுதுறனா எண்ட பயம். எல்லாம் சேர்ந்து ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு பந்திதான் சரியா எழுத முடியும். அதிலயும் ஒரு பிரச்சின, சில நேரம் என்ன மறந்து விம்ப எழுத்தா எழுதிப்போடுவன். கணித வரைபெல்லாம் எப்பிடிதான் சரியா கீறினாலும் விம்ப வரைபா வந்திடும். இப்ப நீங்க கண்ணாடி ஒரு எழுத்த பார்த்தா எப்பிடி மாறி தெரியுமோ அப்பிடிதான் எனக்கு எழுத வரும். வேகமா எழுதேக்க விம்ப எழுத்த தான் நான் எழுதுறன் எண்டு எனக்கே தெரியாது. எழுதி முடியேக்கத்தான் அது தெரியும். பிறகு திருப்பி யோசிச்சி யோசிச்சி எழுத முதல் நேரம் முடிஞ்சிடும்..”

“..பேப்பர் திருத்திற ஆக்களுக்கு என்ர பிரச்சின தெரியாதுதானே. அவை நினைப்பினம், நான் வேணுமெண்டு விளையாடி இருக்கிறன் எண்டு. ஆனால் இதனாலதான் 2 தரம் சோதினயிலயும் பாஸ் பண்ணேல்ல. இந்த முறையும் எடுக்கப்போறன். என்ன நடக்குமெண்டு தெரியேல்ல..”

அவனின் அபூர்வ பிரச்சினை பற்றி அவன் வலிததும்ப பேசிக்கொண்டிருக்கையில் நம் மெய் மரத்துப் போய்விடுகிறது. போர் எவ்விதத்திலெல்லாம் சிறார்களைத் தின்றுகொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஆழ சிந்தனை நம்மை அவர்களின் உலகத்துக்குள் இழுத்துச் சென்றுவிடுகின்றது.

எனக்கு என்ஜினியரா வரவேணும் எண்டுதான் ஆசை. ஆனா எங்க..

சிலவேள கை இருக்கிற ஆக்களோட ஒப்பிடேக்க கவல வரும்.

கிரிக்கெற் விளையாடேக்க இந்தக் கவல வரும்.

எலக்ரோனிக் சாமானுகள் திருத்துற வேலையில விருப்பம் வந்திருக்கு.

இப்போதைக்கு ஏ.எல் படிக்கவேணும் எண்டதுதான் கனவு. – நிரோசன் தொடர்ச்சியற்று பேசிய சொற்கள் அவனின் முழு வாழ்க்கையையும் எதிர்காலம் மீது அவன் கட்டியிருக்கும் கனவையும் சொல்லின. அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே அவனின் அப்பா குறுக்கிட்டார்

“மகன பார்க்க பாக்க கவலையாதான் இருக்கும். என்ன செய்யிற. இது எங்களுக்கு தீராத கவலதான். எந்தக் காலத்திலயும், என்ன செய்தாலும் இது தீரப்போறதில்ல.”

அவரின் கவலையை புரிந்து கொண்டிருக்கும் நிறோசன், “எதுவும் செய்ய ஏலாதெண்டு இல்ல. எல்லா வேலையும் என்னால இயன்றத அம்மாக்கும், அப்பாக்கும் செய்து குடுப்பன். ட்ரக்டர் ஓடுவன்” என்றான்.

“ப்ளாஸ்ரிக் கையொண்டு இருக்கு. எங்கயும் கொண்டாட்டங்களுக்கு அனுப்புறதெண்டா, ஃபுல்கை சேட் போட்டு, அந்தக்கைய போட்டு அனுப்புவன். கையில்லாம போனா சனமெல்லாம் மகனையே வேடிக்க பார்க்கும். அதோட போட்டோவிலயாவது கை இருக்கிறமாதிரி இருக்கும். அதைப் பார்க்க சின்னசந்தோசம்தான். ஆனால் பிறகு நினைக்க கவலதான் மிஞ்சும்.” என நிரோசனின் அம்மா சொல்கையில் அத்துடன் அந்த உரையாடலை முடித்து விட வேண்டும் போல் இருந்தது.

அதற்கு மேல் அவர்களுடன் உரையாடி அந்த கவலையை வளர்க்க விரும்பவில்லை

– ஜெரா –

நன்றி - துளியம்