சம்பந்தனின் பதவியை பறிக்க மஹிந்த முயற்சி
ஜனாதிபதி, பிரதமர் கனவுகள் கலைந்துள்ள நிலையில் சம்பந்தனின் எதிர்க்கட்சி ஆசனத்தையேனும் பறிக்கும் நோக்கத்திலேயே மஹிந்த அணியினர் செயற்பட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தில் குழப்பங்களை மேற்கொள்ளவும், பயங்கரவாத கதைகளை பரப்பவும் இதுவே காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
எம்மீது பொய்க்குற்றம் சுமத்தி எதிரணி பலத்தினை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி பதவிக்காக தொடர்ச்சியாக மஹிந்த அணியினர் போராடிவரும் நிலையிலும், மக்கள் விடுதலை முன்னணி மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகளின் பின்னணி தொடர்பிலும் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தனது ஜனாதிபதி பதவியை தக்கவைக்க பல்வேறு நடவடிக்கைகளை மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்டார். அவருடன் இருக்கும் அணியினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தன. எனினும் ஜனாதிபதி தேர்தலின்போது அவரது சர்வாதிகார ஜனாதிபதி பதவியை தக்கவைக்க முடியாது போய்விட்டது. அதேபோல் அடுத்த பொதுத் தேர்தலின்போதும் தன்னை பிரதமராக்கிக்கொள்ள வேண்டும் என அவர் முயற்சித்தார். சகல அரசியல் மேடைகளிலும் தன்னை பிரதமராகக் வேண்டும் என்ற வகையில் கருத்துக்களை முன்வைத்தார். ஆனால் பொதுத் தேர்தலின்போதும் அவரால் பிரதமாக முடியாது போய்விட்டது. தான் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற கனவு நனவாகவில்லை.
எனவே தான் அவரது அணியினரை வைத்து இப்போது எதிர்க்கட்சி பதவியையேனும் கைப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றார். சம்பந்தனின் எதிர்க்கட்சி நாற்காலியை கைப்பற்றும் தீவிர முயற்சியை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதற்காகவே பொது எதிரணியினர் என தம்மை அடையாளப்படுத்தி பாராளுமன்றத்தில் தனித்து செயற்படவும் முயற்சிக்கின்றனர். எனினும் அவர்களது செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தடையாக இருப்பதன் காரணத்தினால் தான் எம்மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதேபோல் வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது எனவும் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரிவினைவாதத்தை உருவாக்குவதாக கூறியும் தமது காரியத்தை சாதிக்க முயற்சிக்கின்றனர். எவ்வாறு இருப்பினும் இவர்களின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.








