Breaking News

என்னைத் தென்னம்பாளையால் அடிக்கவேண்டும்! - கோத்தா



சரத் பொன்சேகாவிற்கு இராணுவ தளபதி பதவி வழங்கிய தன்னை தானே அடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

பாரிய ஊழல், மோசடி தொடர்பில விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) பிரசன்னமான போது, ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதியும், அவரது சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமைத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ஷ,

மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாத்திரம் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வில்லை என்றும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, லக்ஷ்மன் கதிர்காமரின் மனைவி ஆகியோருக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததென அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கான அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டமை அநீதியானது என்றும் கூறினார்.

இதேவேளை, பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபகஷ கடமையாற்றிய போது, அவரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் அவராலேயே திட்டமிடப்பட்ட ஒரு செயல் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்து குறித்தும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பப்பினர்.

இதற்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ஷ, இவ்வாறான கருத்து வெளியிடும் நபருக்கு இராணுவ தளபதி பதவி வழங்கிய தம்மை முதலில் அடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.