Breaking News

பசில் ஏன் மே தின மேடையில் ஏறவில்லை- விமல் விளக்கம்



பசில் ராஜபக்ஷ கூட்டு எதிர்க் கட்சியில் செயற்படுவதையிட்டு தனக்கு எந்தவித கருத்து முரண்பாடும் இல்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

நாடு செல்லும் போக்கிலிருந்து நாட்டை மீட்டெடுக்க எந்த ஒருவருக்கும் பங்களிப்பு செய்யலாம். எமது முயற்சியும் அதுவே. எம்முடன் இணைந்து பசில் ராஜபக்ஷ தனது ஒத்துழைப்பை வழங்குவதை பிழையாகப் பார்க்க முடியாது.

கடந்த மே தின நிகழ்வுக்காக அவர் பாரியளவில் முயற்சி எடுத்தார். இருப்பினும், மே தின மேடையில் அவர் ஏறவில்லை. அவர் நினைத்திருந்தால் தான் இந்த மே தினத்தை ஏற்பாடு செய்வதற்கு பிரதான பங்காற்றியவர் என மேடையில் பிரகாசித்திருக்கலாம். ஆனால், அவர் பாதையில் எங்கோ நடைபெற்ற மே தினக் கூட்டமொன்றிலிருந்து வெறும் வாழ்த்து ஒன்றைத் தெரிவித்திருந்ததை காண ஊடகங்களில் கண்டுகொள்ள முடிந்தது.

அவர் தனக்குரிய இடம் எது என்பதை விளங்கிச் செயற்படுகின்றார் என்பதையே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. குற்றச்சாட்டு யாருக்கும் முன்வைக்கலாம். அது நிரூபிக்கப்பட வேண்டும். அதுவரைக்கும் யாரைப் பற்றியும் தீர்மானிக்க முடியாது. வெற்றிக்கு பலர் உரிமை கோர இருக்கின்றார்கள். தோல்விக்கு அவ்வாறல்ல எனவும் விம்ல வீரவங்ச மேலும் கூறினார்.

நேற்று (9) நள்ளிரவு வரை தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்த பசில் ராஜபக்ஷ, மீண்டும் கூட்டு எதிர்க் கட்சியிலும் மீண்டும் ஆதிக்கம் செலுத்த வருவதாக கூறப்படுகின்றது. இது குறித்து தமது கருத்து என்னவென அவரிடம் வினவிய போதே வீரவங்ச இவ்வாறு பதிலளித்தார்.