Breaking News

இலங்கை மீதான தடையைத் தளர்த்தியது அமெரிக்கா

இலங்கை மீதான நீண்டகால இராணுவத் தளபாட வர்த்தகத் தடையை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான பாதுகாப்பு ஏற்றுமதிகள் தொடர்பான அனுமதிக் கட்டுப்பாடுகள், மே 4ஆம் நாள் தொடக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த விடயங்களின் அடிப்படையில், சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் மீளாய்வு செய்யப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க நிதிச் சட்டங்களின் கீழ், இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், பாதுகாப்பு ஏற்றுமதி ஆதரவுகளுக்கு அமெரிக்கா உதவி அளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

எனினும், கண்ணிவெடி அகற்றல், அனர்த்த மீட்பு, கடல் மற்றும் வான்வழி கண்காணிப்பு தொடர்பான கருவிகளைப் பரிமாற்றம் செய்வதற்கு, மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.