Breaking News

கிழக்கு முதலமைச்சருக்கு எதிரான தடையை வாபஸ் பெற்றது இராணுவம்



முப்படை முகாம்களுக்கு செல்ல வேண்டாம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட்டிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை இன்று திங்கட்கிழமை முதல் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முப்படை உயரதிகாரிகளுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

சம்பூரில் கடந்த 20ஆம் திகதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விழாவின்போது கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு முதலமைச்சர் நஷீர் அஹமட் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கிழக்கு முதலமைச்சருக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் முப்படையினரின் எந்தவித முகாம்களுக்கும் கிழக்கு முதலமைச்சர் செல்ல வேண்டாம் என்ற இடைக்காலத் தடையை ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு கடந்த 26ஆம் திகதி அறிவித்திருந்தது.

மேலும் கிழக்கு முதலமைச்சர் கலந்துகொள்ளும் எந்தவித நிகழ்வுகளிற்கும் முப்படையினர் பங்குகொள்ள மாட்டார்கள் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இந்தத் தடை நீக்கப்பட்டிருப்பதை இராணுவ ஊடகப் பேச்சாளர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார்.



இதேவேளை கடற்படை அதிகாரியுடன் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்ற வாய்த்தர்க்கம் தொடர்பாகவும், தற்போது ஏற்பட்டிருக்கின்ற விமர்சனங்கள் குறித்தும் விளக்கம் அளிப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் இன்று மாலை அவசர சந்திப்பொன்றை மாகாண முதலமைச்சர் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.