Breaking News

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது!

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென பொதுமக்களின் ஒரு துண்டு காணி கூட சுவீகரிக்கப்பட மாட்டாது என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இணைத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

பலாலி விமான நிலையம் தற்போது இருக்கும் அளவினை விட விஸ்தரிப்பு செய்யப்பட மாட்டாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் காலை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மகளீர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. 


இந்தக் கூட்டத்தில் பலாலி பிரதேசத்தின் மீள்குடியேற்ற தொடர்பிலேயே முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது. இதன் போது பொதுமக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படல் வேண்டும் எனவும், பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென தமது காணிகள் சுவீகரிக்க்ப்படக்கூடாது என்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர் அதிகாரிகளுடன் கலந்து உரையாடியுள்ளதாகவும், அவர்கள் காணிகளை சுவீகரித்து விமான நிலைய அபிவிருத்தியினை மேற்கொள்வதில்லை என்று உறுதி வழங்கியுள்ளதாகவும் கூறினார். 

அத்துடன் தமிழ் மக்களின் சம்மதம் இல்லாமல் பலாலி விமான நிலையத்திற்கென ஒரு துண்டு காணியும் சுவீகரிக்கப்பட மாட்டாது என உறுதியளித்த இந்திய அதிகாரிகள் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்பு செய்யப்பட மாட்டாது எனவும், பிராந்திய விமான நிலையமாகவே அபிவிருத்தி செய்யப்படும் எனவும் கூறியதாகவும் இதற்கமைய தற்போது அமைந்துள்ள விமான நிலைய காணிகளுக்குள்ளேயே அந்த மேம்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

இதனையடுத்து அங்கு கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் விஜயகாலா மகேஸ்வரன், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கப்படும் என அரசாங்கம் உறுதியாக அறிவிக்கவில்லை என்று கூறினார். அத்துடன் மக்களுடைய அந்தக் காணிகள் விடுவிக்கப்பட தான் வேண்டும் என்றும், மக்களுடைய மீள் குடியேற்றத்திற்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.