Breaking News

போர்குற்றதிற்கான நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை அமைக்க ஒபாமா வலியுறுத்தல்!



ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் நேற்றுமுக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்ற ஜப்பானின் ஐல் சீமா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளாராம்.

இதன்போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் வினவியுள்ளார்.

குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலே அமெரிக்க ஜனாதிபதி வினவியுள்ளதுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் நேற்று முன்தினம் பொறுப்புக்கூறலின் ஒரு அங்கமான காணாமல்போனோர் குறித்த விவகாரங்களை அணுகுவதற்காக பிரத்தியேக அலுவலகமொன்றை அமைக்க எடுத்துள்ள தீர்மானத்தையும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒபாமாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.