Breaking News

அப்துல்கலாமின் சிலை யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழுக்கு உத்தியோகபூர்வமான விஜயம் ஒன்றை எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ளவுள்ளார். அது தொடர்பான பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தலைமையில் நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.வி.விக்கிரமசிங்க கலந்துகொண்டு பாதுகாப்பு நிலைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அன்றைய தினம் நான்கு உத்தியோகபூர்வமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வடமாகாண மற்றும் யாழ்.தலைமை பொலிஸ் நிலையங்களும், சர்வதேச தரத்திற்கேற்ப இந்திய அரசாங்கம் வழங்கிய 145 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழ்.நூலகத்தில் உள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாமின் உருவச்சிலை திறப்பு மற்றும் காங்கேசன்துறையில் உள்ள மக்களின் காணிகளை மக்களின் பார்வைக்கான விடுப்பு தொடர்பிலும் ஜனாதிபதி விசேடமாக பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ள அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக பங்கேற்று உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரின் செயலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.