ஈழ தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும் வரை போராடுவோம் – ரோசையா!
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும்வரை தமது முயற்சி தொடரும் என தமிழ்நாட்டு ஆளுநர் ரோசையா தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை தமிழ் நாட்டு ஆளுநரின் உரையுடன் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமானபோது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது உரையில்,
இலங்கையில் வாழும் ஏனைய இனங்களைப்போல் தமிழ்மக்களுக்கும் சம உரிமையும் ஏனைய வசதி வாய்ப்புக்களும் கிடைக்கவேண்டும் என்றும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித் தொழில் ஈடுபடும் தமிழக மீனவர்களை சிறீலங்காக் கடற்படையினர் தொடர்ந்தும் கைதுசெய்வதுடன் துன்புறுத்தும் சம்பவங்கள் தொடராது இருக்கவும் அவர்களது உயிரையும் உடமைகளுக்கான பாதுகாப்பையும் வாழ்வாதாரத்திற்கான உரிமையையும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் நீண்டகாலம் நிலவும் இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கத்தின் மூலம் நிரந்தரத் தீர்வு காண, மத்திய அரசிடம் தமிழ் நாட்டு அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தும் என்றும் கச்சதீவை மீட்டு, பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.








