காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்ட வரைவு அடுத்த மாதம் நாடாமளுன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்கென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 2003 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இந்த ஆணைக்குழுவிற்கு பதிலாக அமைக்கப்படும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நிரந்தமான அமைப்பாக இருக்கும் என ஒஸ்ரின் பெர்ணாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அனைத்து விடயங்களையும் விசாரணை செய்வதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட இந்த அலுவலகத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
காணாமல் போனோர் தொடர்பில் அரச துறை நிறுவனங்கள் மற்றும் மக்கள் வழங்கும் தகவல்கள் அடங்கிய தரவு களஞ்சியமொன்றையும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் பேண உள்ளது.
இறுதிக் கட்ட யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு நம்பகமான பொறிமுறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.








