Breaking News

தென்­­னிந்­திய திரைப்­ப­டங்­க­ளே யாழில் ஆவா,ரொக்டீம் உரு­வா­கக்­கா­ர­ணம்!



யாழ் குடா நாட்டில் ‘ஆவா குறூப்’ ‘ரொக்டீம்’ போன்ற குண்டர்கள் குழுக்கள் உருவாக தென்னிந்திய திரைப்படங்களே காரணமாக உள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் நேற்று(வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு சபா பீடத்தில் சமர்ப்பித்துள்ள நீண்ட பதிலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் முன்வைத்துள்ள பதிலில், ‘தென்னிந்திய திரைப்படங்களை அதிகமாக பார்க்கும் யாழ் குடாநாட்டு இளைஞர்கள் திரைப்படங்களில் வருபவர்களைப் போன்று குழுக்களாக ஒன்று சேர்ந்து யாழ் நகரின் பல்வேறு பிரதேசங்களிலும் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர்.

யாழில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமையினால் கைது செய்யப்பட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ‘ஆவா குறூப்’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வீடுகளினுள் அத்துமீறி நுழைதல், இருவரைத் தாக்கி காயப்படுத்தியமை, வாளால் வெட்டி ஒருவருக்கு படுகாயங்களை ஏற்படுத்தியமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் மேற்படி குழுவுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 பேர் பிணையில் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஆவா குறூப் என்ற குழுவிலிருந்து பிரிந்து சென்றதாக சந்தேகப்படும் ரொக் டீம் என அடையாளப்படுத்தப்படும் குழுவானது கடந்த மே மாதம் 8 ஆம் திகதி யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

ஏழு குற்றச் செயல்கள் தொடர்பில் அக்குழுவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களது வங்கிக் கணக்கு தொடர்பான அறிக்கை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்தக் குழுவில் பாடசாலை மாணவர்களும் இருக்கின்றமை தெரியவரவில்லை.

இக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. ஆவா குறூப், ரொக் டீம் போன்றவற்றின் செயற்பாடுகளை தடுப்பதற்காக புலனாய்வு பிரிவினரால் தகவல்கள் சேகரிக்கப்படுவதோடு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.