Breaking News

சமூகவலை போராளியாய் வாழ்தலென்பது….! – ஜெரா

“ஆ.. மாடியில இருந்து குதிச்சி செத்து நாசாமா போ..”


மடிக்கணனிக்கு முன்னால இருந்து ஆழமாகப் பேஸ்புக் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவன் எழும்பி ஓடிப்போய் 2 ஆவது மாடியில இருந்து கீழே குதிக்கிறான். அந்த விடுதியெங்கும் பரபரப்புப் பரவுகிறது. அனைவரும் அவசரமாகின்றனர். அவசர வாகனம் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து அவனுடலை அள்ளிப் போகிறது. அவனின் தற்கொலைக்கான காரணத் தேடலை நண்பர் – போராசிரியர் குழாம் தீவிரப்படுத்துகின்றது.

பேஸ்புக், டுவீற்றர், இங்ஸ்ரோக்ராம், ஜீமெயில் என எதிலும் அதற்கான தேடல் முடிவு வெற்றியளிக்கவில்லை. மாடியில் இருந்து குதித்தவனின் அறையில் வசித்த நண்பன் அவனின் கைத்தொலைபேசியைக் கவனித்தான். 97 மிஸ்ட் கோல்!. 43 எஸ்எம்எஸ்!. அவனின் பார்வைபடாமல் இருந்திருக்கின்றது.

அல்லது அத்தனை அழைப்புகளுக்கும், குறுந்தகவல்களுக்கும் பதிலளிக்காமல் பேஸ்புக்கில் போராடிக் கொண்டிருந்திருக்கின்றான். குறுந்தகவல் உள்ளே போவதில் உசாராகின்றனர் நண்பர்கள். “ஏய்.. ஆன்சர் பண்ணுடா..அவசரமா ஒரு விசயம் கதைக்கனும்.. உடன எடு.. ப்ளீஸ்..” என்ற குறுஞ்செய்திகளே திரும்ப திரும்ப அனுப்பப்பட்டிருப்பதை நண்பர்கள் கண்டுபிடிக்கின்றனர்.

பேஸ்புக் போராளியான இன்னொரு நண்பனின் மூளை தீவிரமாக தொழிற்படுகிறது. தற்கொலை செய்து கொண்டவனின் பேஸ்புக் அரட்டைகளை ஆராயத் தொடங்குகிறான். அவனின் பகிர்வுகளைப் பரிசோதிக்கிறான். அதில் “அதிர்வு” இணையத்தளத்திலிருந்து பகிரப்பட்ட ஒரு வீடியோ ஒன்றின் இணைப்பு இருக்கின்றது. அந்த வீடியோவில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின், “கூட்டணியினர் பிரதேச சபை தேர்தலுக்கும் விடுதலை, தனித் தமிழீழம், சுயநிர்ணய உரிமைகளை முன்வைத்தே பிரசாரம் செய்வர்” என்ற நேர்காணல் காணப்படுகின்றது. அதற்குக் கீழே போகிறான்.

முடிசூட்டப்பட்ட வடமாகாண சபை முதலமைச்சர் கௌரவ விக்கினேஸ்வரன் அவர்களது படமும், அதற்கு அவன் எழுதிய எதிர் கருத்துக்களும் காணப்படுகிறது. அந்தக் கருத்துக்கு 110 லைக்ஸ், 86 பகிர்வுகள், 242 கருத்துக்கள் இடப்பட்டிருக்கின்றன. அவனின் ஆதரவாளர்களும், எதிரானவர்களும் கண்மூடித்தனமான கருத்துத் தாக்குதலை அவன் தற்கொலைக்கு சற்றுமுன் வரை நடத்தியிருக்கின்றனர்.ஆங்காங்கே கருத்துப் புகை தெரிகிறது.

இன்னும் கீழே போகிறான் அந்தப் பேஸ்புக் போராளி. அங்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ.இரா.சம்பந்தன் அவர்கள் முடிசூடப்பட்ட நிலையில் இருக்கும் படமும் அதற்கு அவன் எழுதிய இரட்டைவரி காரமான வசனமும் காணப்படுகின்றது. அதற்கும் பலமான எதிர்- புதிர் கருத்துக்கள் இடப்பட்டிருக்கின்றன.

அதற்கு கீழே கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசார அறிக்கைகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ. இரா.சம்பந்தன் அவர்கள் சிங்கக் கொடி பிடித்த படம் போன்றனதான் இருக்கும் என்பதை உணர்ந்துகொண்ட பேராசிரியர் பேஸ்புக் புலனாய்வை நிறுத்தும்படி கோருகின்றார்.

உடனடியாக தற்கொலைக்கான காரணத்தையும் அந்தப் பேராசிரியர் அறிவிக்கின்றார். அவரின் அறிக்கை, “தீவிரமான தமிழ் தேசிய பற்றாளனாக இருந்த இந்த மாணவன், சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை வெளிப்படையாகப் பதிவுசெய்து வந்திருக்கின்றார். தமிழ் கூட்டமைப்பின் அரசியல் போக்கு குறித்தும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றார். அதனால் பேஸ்புக் களத்தில் பல முனை தாக்குதலை எதிர்கொண்டிருக்கின்றார். தரையிறக்கம், ஊடறுப்பு, பொக்ஸ் அடி என சகல வழி முறைகளையும் பின்பற்றி முறியடிப்பு சமர்களை நடத்தி சமர்க்கள நாயகனாக மாறியிருக்கின்றார்.

அவருக்கு விழுந்திருக்கும் லைக்குகளில் 99 வீதமானவை பெண்களுடையதாகவே இருக்கின்றது. இது அவர் பேஸ்புக் சமர்க்கள நாயகனாக இருந்திருக்கின்றார் என்பதை காட்டுகின்றது. இதனை வைத்துப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் இந்த அரசியல் போக்கும், அண்மையில் ஏற்பட்டிருந்த ஆசனப் போரும் குறித்த மாணவனின் மனநிலையை மோசமாகப் பாதித்திருக்கின்றது. அதனால் ஏற்பட்ட மன எழுச்சியினால் பேஸ்புக்கில் இருந்து எழுந்து ஓடிப்போய் மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்..” முடிவை அறிவிக்கையில் மூச்சு வாங்கியது பேராசிரியருக்கு.

உடனடியாக மற்றைய பேஸ்புக் போராளியான மாணவன் குறுக்கிட்டான். “சேர்..அவனின் காதலியான வள்ளியம்மையிட்டயிருந்து வந்த மெசேஜ் ஒன்டு சட் பொக்ஸ்ல கிடக்கு. அதில அவள் இப்பிடி சொல்லியிருக்கிறா..”

“எப்பிடி?”

“ஆ.. மாடியில இருந்து குதிச்சி செத்து நாசாமா போ..”

எனவே அந்த 97 மிஸ்ட் கோல், 43 குறுஞ்செய்திகளுக்குரியவள் வள்ளியம்மையாகத்தான் இருக்கும். உடனடியாக அவருக்கு அழைப்பெடுங்கள். சம்பவ இடத்துக்கு வரச் சொல்லுங்கள். பேராசிரியர் மாணவர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டே வேகமாக நடந்து படியிறங்குகின்றார்.

கீழே வள்ளியம்மை நண்பிகள் புடைசூழ, கையை வைத்து வாயை மூடியபடி நிற்கிறாள். கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கின்றது. திமிறித் திமிறி அழுகிறாள். அவளின் மனம் வெடிக்கும் சத்தம் அந்த கட்டடமெங்கும் எதிரொலிக்கின்றது. பேராசிரியர் விசாரிக்க தொடங்குகின்றார்.

“இல்ல சேர்.அவனும் நானும் கெம்பசுக்கு வந்து செக்கன்ட் இயர் படிக்கிறதில இருந்து லவ் பண்றம். கொஞ்ச நாள் சந்தோசமாயிருந்தம். அதுக்குப் பிறகு அவனுக்கு என்ன நடந்ததோ தெரியேல்ல. எப்ப எடுத்தாலும் அரசியல் பத்தியே பேச தொடங்கீற்றான் பைத்தியம்மாதிரி. சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசினான்.சம்பந்தன் சிங்கக் கொடி பிடிச்ச நேரமெல்லாம் பைத்தியம் பிடிச்சமாதிரி இருந்தான். சம்பந்தன், சுமந்திரன் சுதந்திர தினத்தில கலந்து கொண்ட நேரம் அந்தரத்தில தொங்கினான். 3 நாள் கதைக்கவேயில்ல. நான் 3 நாள் சாப்பிடவேயில்ல.
எந்த நேரத்தில் போன் பண்ணினாலும் எனக்கு விளங்காத அரசியலே பேசினான்.

எனக்கே வெறுத்துட்டுது சேர். ஒரே வகுப்பு தான் சேர் ரெண்டு பேரும். வகுப்பில கூட இந்த அரசியல் பேசி எல்லாரோடையும் சண்ட. பிரசன்டேசனுக்கு விட்டால் 2 வரி தான் பாடம் பற்றி கதைக்கிறான். பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் செம்புகள் என்டு திட்டுறான். எல்லா பிள்ளையளும் என்னைப் பார்த்து சிரிக்குதுகள். அதுக்குப் பிறகு அவனோட அடிக்கடி சண்டதான் வரும். சாப்பிட்டியா, அந்த நோட்ஸ் எல்லாம் எழுதி வை, அவசரமா “ரியுட்” எழுதி தா, 10 ரூபாயக்கு ”ரீலோட்” போட்டுவிடு என்டத கேட்க மட்டும்தான் “கோல்” எடுப்பான். ஆனா முதல் அப்பிடியில்ல. உருகி உருகி பேசுவான் சேர்..”, உருகி ஊற்றினாள் வள்ளியம்மை

“சரி பிள்ளை இன்டைக்கு ஏன் அவன சாகச் சொன்னனீ?”

“..இன்டைக்கு என்ர பிறந்த நாள் சேர்.போன வருசம் நடுச்சாமம் 12 மணிக்கு வாழ்த்து சொன்னவன். இந்த வருசம் அத மறந்தே போயிற்றான். இன்டைக்கு முழுதும் கோல் பண்ணினன். மெசேஜ் போட்டன்.எதுக்குமே பதில் இல்ல. பேஸ்புக்ல ஒரு தொகை மெசேஜ் போட்டன். சுமந்திரன் ஐ.நாவுக்குப் போனது இலங்கைக்கு வக்காளத்து வாங்கத்தான் எண்ட பேஸ்புக்ல எழுதி, சுமந்திரனின் ஆதரவாளர்களிட்ட மரண அடி வாங்கிக்கொண்டிருக்கிறான். எல்லாம் முடிய எனக்கு ஹாய் போட்டான். எனக்கு உன்ர எதுவும் தேவயில்ல மாடியில இருந்து குதிச்சி செத்து நாசமா போ என்டு பேசீற்றன் சேர்..” ஓவென்று அழுதாள் வள்ளியம்மை.

எல்லோரும் மருத்துவமனைக்கு பயணமாகிறார்கள்.லேசான மழையில் சீனாக்காரன் அமைத்த வீதியில் கார் பயணிப்பது, பறப்பதை போல இருக்கிறது. அவன் உடல் முழுதும் கட்டுத்துணிகளால் கட்டப்பட்டிருக்கிறான். அவனுக்கு உயிர் இருப்பதை ஐ.சி.யு தாதியர்களின் அவசர ஓட்டம் காட்டுகிறது.எல்லோரும் அவன் மீள் வருகைக்காகப் பிரார்த்திக்கின்றனர்.“நல்ல நண்பன் வேண்டுமென்று இந்த மரணமும் நினைக்கின்றதா?” என்ற பாடலை எல்லோரும் மனதுக்குள் முணுமுணுத்தபடி அந்த விறாந்தையெங்கும் உலாவுகின்றனர். அதற்குள் 2 நாட்கள் கடந்துவிடுகிறது. அவனும் துயிலெழும்புகிறான்.அவனை அவளும், அவனை அவளும் உணர்வுத் ததும்ப பார்த்து அழுகின்றனர். எழுந்திருக்க முயற்சிக்கின்றான். வள்ளியம்மை உடனடியாகப் காட்போட் மட்டையில் தயாரிக்கப்பட்ட பதாகையை அவனை நோக்கி நீட்டுகிறாள். அதில் கீழ் வரும் 4 கட்டளைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

1. எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பையோ, அவர்களின் அரசியலையோ விமர்சிக்கக் கூடாது.
2. அதைப் பற்றி போனில் வள்ளியம்மையுடன், இதர நண்பர்களுடன் அலட்ட கூடாது.
3. பேஸ்புக்கில் கூட்டமைப்பு பற்றியோ, விக்கினேஸ்வரன் பற்றியோ, அமைச்சர்கள் பற்றியோ, அவர்களின் வேலைத்திட்டங்கள் பற்றியோ எதுவும் எழுதக் கூடாது. யாரும் எழுதினாலும் கருத்திடக் கூடாது.
4. இனி வரும் காலங்களில் பேஸ்புக்கில் பூ படங்கள், நடிகர்களின் படங்கள், நட்பு வசனங்கள் மட்டுமே பகிர வேண்டும்.

”“இந்தக் கட்டளைக்கு ஓம் என்டு சத்தியம் பண்ணினாதான் நான் இனி கதைப்பன். இல்லாட்டி என்னை மறந்துடு முருகா” என்கிறாள் வள்ளி.

வள்ளியின் தலையில் முருகன் ஓங்கியடித்து சத்தியம் செய்யவும், கற்பித்துக் கொண்டிருந்த பேராசிரியர் கீழே விழுந்த சோக் பீஸை எடுக்கக் குனியவும் எடுத்த நேரம் சரியாக இருக்கின்றது. அவரின் மொட்டைத்தலையில் நங்கென்று இறங்குகிறது முருகனின் சத்தியம். “கெட் அவுட் ஐசே..ஒரு புரொபசர் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறன். எதையும் கவனிக்காம நித்திர கொள்றியா..கெட் அவுட் ஐசே..”

“ஓ இன்டைக்கும் கனவா..?”

வகுப்பை விட்டு வெளியேறுகிறான் முருகன். இவன் அவமானப்பட்டதைப் பார்த்து குப்பென்று சிரிக்கிறது வகுப்பறை.

நன்றி -துளியம்