அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தியில்லை ; சம்பந்தன் அரசாங்கத்தின் மீதுசாடல்
பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகள் வழங்கும் நிதி தொடர்பில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடுவதில்லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு என ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகள் நிதியுதவிகளை வழங்குகின்றன. இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக வழங்கப்படுபவை. அந்த மக்களால் ஜனாநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளான எம்முடன் இதுபற்றி கலந்துரையாடப்படுவதில்லை. கலந்துரையாடுவது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் புதிய அணுகுமுறையைக் கொண்டிருந்தாலும் பழைய பாதையிலேயே பயணிக்கிறது. மனதில் புதிய அணுகுமுறை இருந்தாலும் நடைமுறையில் இம்மாற்றம் தென்படவில்லை.
வடக்கு கிழக்கில் உள்ள மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உதவியிருந்தபோதும் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பல நிறைவேற்றப்படவில்லை. நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றை அவர்கள் ஆட்சிமாற்றத்தின் மூலம் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான சூழல் நேர்மையான செயற்பாடுகள் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
யுத்தம் முடிந்து 7 வருடங்கள் முடிவடைந்திருப்பதுடன், புதிய ஜனாதிபதி பதவியேற்று 17 மாதங்களும், புதிய அரசாங்கம் பதவியேற்று 9 மாதங்களும் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நிலையில் நல்லிணக்கம் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்று கூறவில்லை. இதனைவிட கூடுதலான விடயங்களை அரசாங்கம் செய்திருக்க முடியும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை புதிய அரசாங்கம் கையாழும் விதம் கடந்த அரசாங்கத்தைவிட முற்றிலும் மாறுபட்டது. அரசாங்கம் போதியளவு நடவடிக்கை எடுத்திருக்காமையால் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்புவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. வலிகாமத்தில் பெரும் நிலப்பரப்புக்கள் காடுமண்டிக்கிடக்கின்றன. அங்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததுடன் விவசாயம் செய்திருந்தனர்.
தற்பொழுது இக்காணிகள் எவராலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஏன் அவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை. இது போன்று பல காணிகள் எவராலும் பயன்படுத்தப்படாத போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன.
மக்கள் தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு இந்தக் காணிகளைத் தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். சகல வெற்றிடங்களும் அரசியல் தலையீடுகளால் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. சாதாரண இளைஞர் யுவதிகளுக்கு சரியான வேலைவாய்ப்புக்கள் இல்லை. சரியான தகுதி இருந்தும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லை.
தமிழ் மக்களுக்கு ஜனநாயகமும் சமத்துவமும் உறுதிப்படுத்தப்படுவம் வரை எம்மால் அரசாங்கத்துக்கு பங்களிப்புச் செய்ய முடியது. இதனை நிறைவேற்றினாலே அரசுக்கான பங்களிப்புப் பற்றி யோசிக்க முடியும்.
அரசாங்கத்துக்கு நாம் பங்களிப்புச் செலுத்தவில்லை என்பதற்காக வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் காட்ட முடியாது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கள் பற்றியும், ஏனைய பகுதிகளுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கள் பற்றியும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இதனைவிட, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் விடுதலை மற்றும் காணிகளை விடுவிப்பது உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கவேண்டும். அரசாங்கத்தைக் குற்றச்சாட்டுவதற்காக இந்த பிரேரணை கொண்டுவரப்படவில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இதனைக் கொண்டுவந்துள்ளோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.








