ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை இன்று
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெறும் வார்த்தையாடல்களாக மாற்றியுள்ளமை, குறித்த வரவு செலவுத்திட்டத்தை பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்றத்தை ஏமாற்றி நிறைவேற்றிக் கொண்டுள்ளமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்மொழிவில் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீதான இன்றைய விவாதத்தின் போது அதற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விவாதத்தின் இறுதி நேரத்தில் பொருத்தமான முடிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று காலை ஒன்பதரை மணியளவில் ஆரம்பமாகும் நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீதான விவாதம் மாலை ஆறரை மணிக்கு நிறைவடையும்.
அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீதான வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படவுள்ளது.








