வெடிவிபத்துக்கு நாசவேலை காரணமா? – அமைச்சர் சாகல சந்தேகம்
கொஸ்கம – சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் நேற்றுமாலை ஏற்பட்ட வெடிவிபத்துக்கு, நாசவேலை காரணமாக இருக்கக் கூடும் என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர், கருத்து வெளியிட்ட அவர்,
சலாவ இராணுவ முகாமின் இரண்டு ஆயுதக் கிடங்குகளில் தீ வேகமாகப் பரவியுள்ளது. அதன் அருகே தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடியாதிருந்ததால், தீ பரவுவதைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.
இதனால் நாம் உயிர்களைப் பாதுகாக்கவே முன்னுரிமை கொடுத்தோம். அதற்குப் பின்னரே எப்படி விபத்து ஏற்பட்டது, என்ன நடந்தது என்று ஆராய்வோம்.
நான் அதிகாரிகளுடன் பேசிய போது, ஆறு கி.மீ சுற்றளவுள்ள பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு அவசியம் இல்லை என்று தெரிவித்தனர். வெடிப்புச் சிதறல்கள் ஒரு கி.மீ சுற்றளவுள்ள பகுதிகளில் தான் விழும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதனால். 2 கி.மீ சுற்றளவுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றால் போதுமானது என்றும் தெரிவித்தனர்.இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் இதற்கு நாசவேலை காரணமாக இருந்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.
காரணத்தைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.








