Breaking News

காணாமற்போனதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் – அமைச்சரவை அங்கீகாரம்


இலங்கையில் போர் நடந்த காலத்தில், காணாமற்போனவர்கள் தொடர்பாக, அவர்கள் காணாமற்போனதை உறுதிப்படுத்தும், சான்றி தழ்களை உறவினர்களுக்கு வழங்குவதற்கு அனுமதிக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

காணாமற்போனதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்கும் சட்டமூலத்துக்கு, அனுமதி அளிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டின் 10 ஆவது இலக்க, இறப்புக்களைப் பதிவு செய்யும் சட்டத் திருத்தமாக, சமர்ப்பிக்கப்படும் இந்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தச் சட்ட மூலம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியானதும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

இதன் மூலம், இலங்கையில் காணாமற்போயுள்ள, ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பத்தினர் பயனடைவர் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர், 65 ஆயிரம் பேர் காணாமற்போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.