கோட்டாபய விரைவில் கைது
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக உயர்மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை கிடைத்திருக்கக்கூடிய முறைப்பாடுகளைத் தொகுத்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் குற்றப் பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கான தகுந்த நேரமொன்றை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் சோதிடர்களிடம் கோரியிருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகுந்த நேரத்தை சோதிடர்களிடம் கோருவதற்கான யோசனையை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவே அதிகாரிகளுக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக சோதிடர்களிடம் ஆலோசனை கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என்ற விடயத்தை ஆணைக்குழு அதிகாரிகள் ஆணையாளருக்கு எடுத்துரைத்திருப்பதாக அறியமுடிகின்றது.
அவன்காட் தனியார் ஆயுதக் களஞ்சிய நிறுவனம் மற்றும் ரக்னா லங்கா நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமைபுரிந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ச செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பாகவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் குவிந்தன.
நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய பல இலட்சம் ரூபாய்கள் இந்த ஒப்பந்தம் காரணமாக இழக்கப்பட்டிருப்பதாக முறைப்பாட்டாளர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவ சிப்பாய்களை பணியிலிருந்த நேரத்தில் ரக்னா லங்கா நிறுவனத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டையும் கோட்டாபய ராஜபக்ச எதிர்கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் வெகுவிரைவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.








