Breaking News

போர்க்குற்ற விசாரணைகளுக்கு –பொன்சேகா



போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார் என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“இந்த விசாரணைகள் அனைத்தும் உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும். வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் இடமளிக்கவில்லை.

இந்த விசாரணைகள் அனைத்துலக கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும்.

இதனால், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையை இந்த விசாரணைகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று சிறிலங்கா அதிபரும், பிரதமரும், கருதுகின்றனர்.

இந்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றம் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கு, முன்னைய அரசாங்கம் கூட முடிவு செய்திருந்தது.

அதேவேளை, போரின் போது சிறிலங்கா படையினர் ஒருபோதும் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை.

இராணுவத்தின் அனுமதி மற்றும் கோரிக்கையின் பேரில் மட்டும் தான், விமானப்படை இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்தும்.

ஆனால் சிறிலங்கா இராணுவம் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துமாறு விமானப்படையிடம் கோரிக்கை விடுக்கவில்லை.

அதைவிட, கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு சில சிறப்பான வசதிகள் தேவைப்படும். சிறிலங்கா விமானப்படையிடம் அத்தகைய வசதிகள் இல்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.