தமிழ் அரசியல் கைதிகள் குறித்த சிறப்பு நீதிமன்றால் பயனில்லை!
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளுக்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தின் ஊடாக இதுவரை ஒருவர்கூட விடுவிக்கப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.
வெடிபொருள் மீட்பு வழக்குகளில் சாட்சியாளரிடம் வெடிபொருட்களை சமர்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்குகளை காலம் தாழ்த்தும் நியாயமற்ற நிலையில் அரசியல் கைதிகளின் நிலை காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
கொழும்பு – மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அவர் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
‘‘தமிழ் அரியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லை. அந்த நீதிமன்றத்தின் ஊடாக இதுவரை ஓர் அரசியல்கூட விடுதலை செய்யப்படவில்லை என்ற பெரும் குறையை என்னிடம் அரசியல் கைதிகள் தெரிவித்தார்கள். ஒருவாக்குமூலத்தின் மூலம் 4,5 குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை விசேட நீதிமன்றமே விசாரணை செய்ய வேண்டும். ஆயினும் ஒரு வழக்கை மட்டும் விசாரணை செய்யும் விசேட நீதிமன்றம், ஏனைய வழக்குகளுக்காக வேறுநீதிமன்றங்களுக்கு அவற்றை தாக்கல் செய்வதாகவும் அரசியல் கைதிகள் கூறினார்கள். அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரிக்கின்றபோது அதற்குரிய பணத்தை செலுத்துவதற்குரிய சக்தியும் அவர்களுக்கு இல்லை.
அதுமட்டுல்ல வெடிபொருள் உற்பத்தி என்ற வழக்கு விசாரணைக்கு வருகின்றபோது கைப்பற்றப்பட்ட வெடிபொருளை சமர்பிக்கும்படி சாட்சியிடம் அறிவிக்கப்படுகின்றது. ஆனால் சாட்சிக்குவருபவர் அவற்றை சமர்பிக்க முடியாத நிலையில் இருக்கின்றார். இவ்வாறு எதுவித நியாயமற்ற நிலையில் வழக்குகள் பிற்போடப்படுகின்றன. சாட்சிக்கு வருபவர் சரியான முறையில் சாட்சியை அளிக்க முடியாதநிலை இருக்கின்றபோது நீதிபதி அவருக்கான அவகாசத்தைக்கூட வழங்குவதில்லை" - என்றார்.








