வரி மோசடி: நட்சத்திர வீரர் மெஸிக்கு 21 மாத சிறை
ஆஜென்ரின கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஸ்பெய்னின் பார்சிலோனா கழக நட்சத்திர வீரருமான லியனல் மெஸிக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வரி மோசடி குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெய்ன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை வரி மோசடி செய்தமை தொடர்பில் மெஸியின் தந்தைக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரும் பில்லியன் கணக்கான யூரோ அபராதத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.
எவ்வாறாயினும் இருவரும் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்ன் கட்டமைப்பின் பிரகாரம் சிறைத்தண்டனை காலம் இரண்டு வருடங்களுக்கு உட்பட்டதாயின், நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளி விடுவிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரி மோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்களில் லியனல் மெஸி மற்றும் அவரது தந்தை ஆகியோர் பார்சிலோனா நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டுள்ளனர்.
தனது நிதி விவகார முகாமைத்துவம் குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் தாம் கால்பந்தே விளையாடுவதாகவும் வழக்கு விசாரணையின் போது லியனல் மெஸி கூறியிருந்தார்.








