ஐ.நா தீர்மானத்தை இலங்கை ஒருதலைப்பட்சமாக மீறுகிறது : தமிழ் சிவில் சமூகம்
போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளையும், வழக்குத்தொடுனர்களையும், விசாரணையாளர்களையும் நிராகரிப்பதன் மூலம், ஐ.நா தீர்மானத்தை இலங்கை ஒருதலைப்பட்சமாக மீறுவதாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குமரவடிவேல் குருபரன் தெரிவிக்கிறார்.
நேற்றையதினம் பாணத்துறையில் இடம்பெற்ற பௌத்த நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு உள்ளீடுகளை நிராகரிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கருத்து வெளியிட்டபோதே குருபரன் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
போர்க்குற்றங்கள் குறித்த பொறுப்புக்கூறும் உத்தேச விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு உள்ளீடு குறித்து இலங்கை அரச தலைவர்கள் அண்மைக்காலமாக முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
கடந்த மாதம் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையின் 32 வது கூட்டத்தொடர் இடம்பெற்றபோது அங்கு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, இது விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்துவரும் கருத்துக்கள் இறுதியானவை அல்ல என்றும், இலங்கை ஐ.நா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வெளிநாட்டமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும் இவர் இதே கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
ஆனால் நேற்றையதினம் பாணந்துறையில் பௌத்த மதகுருமார், பிரதமர், சபாநாயகர் போன்றோர் முன்னிலையில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி இலங்கையின் உள்ளக நிர்வாகம் மற்றும் நீதிக் கட்டமைப்புக்குள் எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றகளையோ, நீதிபதிகளையோ அனுமதிக்கப் போவதில்லை என ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது இது அரச தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டினைக் காட்டவில்லை என்றும், மாறாக இதுவிடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் அவர்களின் அரசியல், இராஜதந்திரம் தந்திரோபாயம் என்கிறார் குமாரவடிவேல் குருபரன்.








