காலம் கடந்தும் கூட்டமைப்பை சாடும் ஆனந்தசங்கரி!
நடந்து முடிந்த யுத்த பூமியில் கொத்தணி குண்டு வீசப்பட்டதா இல்லையா? என்பது இப்போது ஒரு கேள்வியாகிவிட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேலே குறிப்பிட்டது, கேட்கப்பட வேண்டிய கேள்விதான். ஆனால் இதிலும் பார்க்க மிக முக்கியமான விடயங்கள் நடந்துள்ளது.
அவற்றுக்கெல்லாம் இதுவரை பதில் தேடாதது பொறுப்பற்ற செயலாகும். யுத்த பூமியில் இதுவரை என்ன நடந்தது அங்கு எத்தனைபேர் இருந்தார்கள? எத்தனைபேர் காணாமல் போனார்கள்.
இந்த கேள்விகளுக்கெல்லாம் இதுவரை விடை தெரியவில்லை. இவற்றில் பல விடயங்கள் பற்றி உண்மைகளை அறிந்தும் வெளியிட முடியாமல் தமக்குள்ளேயே வைத்து குமுறும் உள்ளங்கள் பல நம் மத்தியில் உள்ளன.
நாம் இன்று அறிய துடிக்கும் பல விடயங்கள் பற்றிய உண்மைகளை நேரில் கண்டவர்கள் மூலம் அறியவும் வாய்ப்புண்டு.
அதற்கு ஒரே வழி ஓர் ஆணைக்குழுவை அமைத்து விசாரணை செய்வதே. எடுத்தற்கெல்லாம் நாளுக்குநாள் அறிக்கைவிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இதைப்பற்றி ஏதாவது பேசினார்களா?
இதுவரைக்கும் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்று அறிய முற்பட்டார்களா? முள்ளிவாய்க்கால் யுத்த பூமிக்கு போய் திரும்பிவந்த எவரிடமாவது யாராவது அங்கு என்ன நடந்தது என்று அறிய முற்பட்டார்களா?
ஏன் இதற்கு இதுவரை ஒரு விசாரணை ஆணைக்குழு வைக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் அரசை கேட்கவில்லை.
அங்கு என்ன நடந்தது என்ற விபரத்தை அறிய ஒரு கண்டிப்பான விசாரணைக்குழுவை அமைத்து கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை என்ன சம்பவங்கள் நடந்தன என்ற விசாரணை நடந்தால்தான் உண்மைநிலை தெரியவரும்.
எத்தனையோ பேர் காணாமல் போயுள்ளார்கள். எத்தனையோ பேர் இறந்துள்ளார்கள். இதுபற்றிய விபரங்களை யுத்தம் முடிந்த இந்த ஏழு வருடங்களில் ஓரளவிற்கேனும் அறிந்திருக்கலாம்.
ஆனால் முன்பு இருந்த அரசும் சரி தற்போதைய நல்லிணக்க அரசும் சரி இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் அக்கறை காட்டாது இருப்பதும் ஏன் என்று தெரியவில்லை.
யுத்தம் நடந்தபோது அங்கு என்ன நடந்தது என்பதையறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது
இது விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்திலும் உரிய நவடிக்கைகளை மேற்கொண்டால் உண்மைநிலையை அறிய உதவும் என்று எதிர்பார்க்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








