Breaking News

பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் காலதாமதம் : கூட்டமைப்பு



பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்தும் நீடித்து வரும் அசமந்தப் போக்கானது, நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பெரிதும் தடையாக உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா ஆணையாளரின் வாய்மூல அறிக்கை மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் என்பவற்றை வரவேற்றுள்ள கூட்டமைப்பு, பல விடயங்கள் இன்னும் தாமதிக்கப்படுவது குறித்து தமது கரிசனையை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படாமை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, வடக்கு கிழக்கில் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை, மீளக்குடியேற்றத்தில் காணப்படும் தாமதம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமை போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்தோடு, காணாமல் போனோர் குறித்து அமைக்கப்படும் அலுவலகமானது, இதற்கு முன்பு அமைக்கப்பட்டு வெற்றியளிக்காது போன ஆணைக்குழுக்களை போலல்லாது, முன்றிலும் மாறுபட்டதாக இருக்கவேண்டுமென கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தின் நிமித்தம், இரு தரப்பினராலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென தெரிவித்துள்ள கூட்டமைப்பு, அனைத்து பிரஜைகளுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அரசியலமைப்பு சட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

மேலும், நிலையான சமாதானம் கிட்டக்கூடிய வகையில், நீதியை நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் போதிய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றினை முன்வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. தீர்வொன்றை அடைவதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் தொடர்ந்தும் ஈடுபாட்டிலிருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளது.