Breaking News

ரணிலுக்கு எதிரான சூழ்ச்சி! நெருக்கடியில் மைத்திரி!

இலங்கையின் அரசியல் தளத்தில் தற்போது பலமாக உள்ள ஐக்கிய தேசிய கட்சியை உடைத்து, மாற்று அரசியல் சக்தியை உருவாக்க மூன்றாம் தரப்பு அணியொன்று தீவிரமாக செயற்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக உருவாக்கப்படும் புதிய அரசியல் நடவடிக்கைகளில் இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கு மஹிந்த ராஜபக்ச தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமைத்துவத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான அனைத்து கட்சிகள் மற்றும் நபர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த தரப்பு கூட்டு எதிர்க்கட்சியின் அமைப்பாளராக செயற்படும் டலஸ் அலகபெருமவிடம் இது தொடர்பில் வினவிய போது, இந்த புதிய நடவடிக்கை ஒரு போதும் கட்சியாகவோ அல்லது முன்னணியாகவோ செயற்படாது. அது ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு பொது மேடையாக மேற்கொள்ளும் நடவடிக்கை மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகிய கட்சிகள் இதனுடன் இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு இதற்காக விசேட அழைப்பு விடுக்கப்படும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி செய்துள்ளார்.

இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை அல்ல எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய போராட்டத்திற்கு நிறைவேற்று குழுவில் உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பசில் ராஜபக்சவினால் கட்டியெழுப்பப்படுகின்ற புதிய அரசியல் கட்சியும் இதில் இணைத்து கொள்ளப்படவுள்ளன.

இந்த புதிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஜுலை மாதம் 28ம் அல்லது 29ம் திகதிகளில் கண்டியில் இருந்து கொழும்பு வரை எதிர்ப்பு பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கொழும்பிற்கு வந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த பேரணியில் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய நடவடிக்கையின் காரணமாக மைத்திரி தரப்பினர் பாரிய சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரியை ஓரங்கட்டி, ஐக்கிய தேசிய கட்சியின் கீழான அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ரணில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.