Breaking News

‘ஜீலை-09′ – தமிழர் வாழ்வின் இரத்தக்கறை படிந்த கொடிய தினங்களுள் ஒன்று



தமிழர் வாழ்வின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த மறக்க முடியாத கோரமான கொடிய நாட்களுள் இன்றைய நாளும் ஒன்றாகும். நவாலி தேவாலயத்தின் மீது 1995ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் எமது உறவுகள் பலியெடுக்கப்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அதன் வடுக்கs ஒவ்வொரு தமிழர் நெஞ்சத்திலும் இன்னும் நீங்காது நிலைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர் தேவாலயத்தின் மீது இலங்கை விமானப்படையினரின் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியதில் 147 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1995ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி இலங்கை இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் என்ற பெயரில் யாழ். குடாநாட்டின் வலிகாமம் மேற்கு பகுதியை இலக்காக கொண்டு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட வேளை மக்களை பாதுகாப்பாக ஆலயங்களில் இருக்குமாறு அறிவித்தார்கள்.

இராணுவ நடவடிக்கை காரணமாக சங்கானை, சண்டிலிப்பாய், சுழிபுரம், சித்தங்கேணி, இளவாலை, பண்டத்தரிப்பு ஆகிய கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் சுமார் 2 ஆயிரத்து 500 பொதுமக்கள் நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் தஞ்சமடைந்தனர்.

21 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் மாலை 5.45 மணியளவில் இலங்கை இராணுவத்தின் புக்காரா விமானம், நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயம் நவாலி சின்னக்கதிர்காம முருகன் ஆலயம் ஆகியன மீதும் அதன் சுற்றுப்புறத்திலும் ஒரே நேரத்தில் 13 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

அதில் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் உட்பட 147 பேர் கொல்லப்பட்டதுடன், பலரும் படுகாயமடைந்தனர். அவர்களில் பலர் இன்றும் ஊனமுற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கொடூர நாளின் நினைவாக ஆண்டுதோறும் இன்றைய நாளில் நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் நினைவுகூரும் வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளை, நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப் பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.