Breaking News

இலங்கையுடன் வலுவான உறவுகள் தொடரும் – சீன வெளிவிவகார அமைச்சர்



சிறிலங்காவில் பெரியளவிலான உட்கட்டமைப்பு மற்றும் தனியார் முதலீடுகளை சீனா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், சிறிலங்காவுடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, நேற்றுமாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

‘வரலாற்று ரீதியாக எமக்கிடையில் உள்ள உறவு, எமது ஆழமான தொடர்புகளையும் வலுவான அரசியல் அடித்தளத்தையும் பரஸ்பர நலன்கள் மற்றும் சமூக ஆதரவையும் உறுதிப்படுத்துகிறது.

அனைத்துலக நிலைமைகளிலோ, எமது உள்நாட்டு நிலைமைகளிலோ எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டாலும், பரஸ்பர உதவிகளும் எமது மூலோபாய ஒத்துழைப்பு எப்போதும் நீடித்து நிற்கும்.

இந்தியப் பெருங்கடலின் கப்பல் போக்குவரத்து கேந்திரமாக சிறிலங்காவை அபிவிருத்தி செய்ய எம்மால் உதவ முடியும்.

துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், தொடருந்து, விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு, சீனாவின் ஒத்துழைப்புகள் தொடர்ந்து கிடைக்கும்.


சீனாவில் இருந்து சிறிலங்காவுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு சீனா ஊக்கமளிக்கும். நீலக் கடல் பொருளாதாரம், கடல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் நிலையம், என்பனவற்றில் தொடர்ந்து இணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டுள்ளது.

அனைத்துலக விவகாரங்கள் தொடர்பாகவும் இருதரப்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், உறுதியான நிலையைக் கடைப்பிடிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான, ஒத்துழைப்பு, எந்தவொரு மூன்றாவது நாட்டையும் இலக்காக கொண்டதல்ல. எமக்கிடையிலான மதிப்புமிக்க உறவுகள், ஏனைய நாடுகளைப் பாதிக்காது.

அபிவிருத்தி இலக்கை எட்டுவதற்கு ஏனைய தெற்காசிய நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.” என்றும் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் கொழும்பு வந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மூலோபாய அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரையும் நேற்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சீன வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசினார். இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் சந்திக்கவுள்ளார்.