ஜனாதிபதியை விமர்சித்தால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இழக்கப்படும்: மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சனம் செய்வோருக்கு வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், கட்சியையும், கட்சித் தலைவரையும் விமர்சனம் செய்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எவருக்கும் எதிர்வரும் தேர்தலில் வேட்பு மனு வழங்கப்படாது. இவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு இம்முறை வேட்பு மனு வழங்கப்படும்.
சுதந்திரக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட திறமையான பல படித்த இளைஞர்கள் நேர்முகத் தேர்வுகளில் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு மூன்று உள்ளுராட்சி மன்றங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ஒரு மாத காலத்திற்குள் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் தெரிவு நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்யும் வகையிலான திறமையான குழுவொன்றை தேர்தலில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.








