30 ஆண்டு கால போரின் விளைவால் வடக்கில் பனை வளங்கள் பாதிப்பு
வடமாகாணத்திலே வகைதொகை இன்றி காணப்பட்ட பனை வளங்கள் இப் பகுதியில் ஏற்பட்ட தொடர்ச்சியான 30 ஆண்டு கால போரின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ளன என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண பனை அபிவிருத்தி வார தொடக்க நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், இலட்சக்கணக்கான பனை மரங்கள் பதுங்கு குழிகள் அமைப்பதற்கும் காப்பரண்கள் அமைப்பதற்கும் என பெருமளவில் தறித்து வீழ்த்தப்பட்டுள்ளன. எஞ்சியிருந்த பனை மரங்கள் பல தொடர் எறிகணை வீச்சுக்களால் சிரச்சேதம் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில் இன்று வடமாகாணத்தில் அதுவும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பனை மரங்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போர்க்காலங்களில் சவர்க்காரத்திற்கு பெருந் தட்டுப்பாடு இப்பகுதியில் ஏற்பட்ட போது பனம் பழத்தில் இருந்து பெறப்பட்ட பனம் களியை உபயோகித்தே உடைகளைச் சுத்தம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
வருடந்தோறும் இடம்பெறக்கூடிய மழை வீழ்ச்சியின் அளவையும் அதிகரிக்கச் செய்வதற்கு பனைமரங்கள் ஒரு காரணியாக அமைவதைக்காணலாம். இத்தனை சிறப்புக்களுங் கொண்ட பனை மரங்களை மிக அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டியது எம் அனைவரதும் தார்மீக கடமையாக அமைவதுடன் எமது எதிர்கால சந்ததிக்கு எம்மவர்கள் இதுகாலமும் பெற்று அனுபவித்த நன்மைகளையும் உணவு வகைகளையும் விட்டுச் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றன.
1978ம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாய் இருந்த திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களின் முயற்சியின் பயனாக பனை அபிவிருத்திச் சபை என்ற ஒரு சபை முதன்முதலாக வட பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவே வடபகுதி மக்களின் அப்போதைய தமிழரின் ஒரே ஒரு கூட்டுத்தாபனம் அல்லது சபையாக விளங்கியது என்று கூறலாம்.
இச்சபையின் தலைமை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிபார்சின் பெயரில் பிரபல தொழிற்சங்கவாதி திரு.மு.ஊ.நித்தியானந்தா அவர்கள் பனம் பொருள் அபிவிருத்தி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் இப் பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இத் தலைமை அலுவலகம் கொழும்புக்கு மாற்றப்பட்ட போதும் அதன் பணிகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வந்தன.








