கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதிக்கு சம்பந்தன் கூறியது என்ன தெரியுமா?
அனைத்து தரப்பினரின் பொது இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கைக்கு சாதகமான பங்களிப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழங்கும் என அக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலமைப்பொன்று இன்மையே ஸ்ரீலங்காவில் காணப்படும் பிரச்சினை என்று கிளிநொச்சில் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இரா.சம்பந்தன் (20 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற இரண்டாவது உலகப் போரினால் ஜேர்மனி மிக மோசமான அழிவைச் சந்தித்திருந்தது. ஜேர்மனி சந்தித்ததை போன்ற அழிவை வேறு எந்தவொரு நாடும் சந்தித்ததாக நான் நினைக்கவில்லை. ஜேர்மனியை வெற்றிகொண்ட நான்கு அதிகாரமிக்க நாடுகளால் யுத்தம் முடியவடைந்த பின்னரும் ஜேர்மனி ஆக்கிரமிக்கப்பட்டது.
ஐக்கிய இராஜ்ஜியம் ஒரு பகுதியையும் அமெரிக்கா ஒரு பகுதியையும் பிரான்ஸ் ஒரு பகுதியையும் சோவியத் ரஷ்யா ஒரு பகுதியையும் ஆக்கிரமித்திருந்தன. அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஜேர்மனியின் ஒரு பிராந்தியத்தை நிர்வகித்தன. தாம் கைப்பற்றிய ஜேர்மனியின் ஒரு பகுதியை தமது நிலப்பரப்பாக சோவியத் ரஷ்யா பேணி வந்தது.
மேற்கு மற்றும் கிழக்கு ஜேர்மனியை பேர்லின் சுவர் பிரித்திருத்தது. பின்னர் தாம் ஆக்கிரமித்த பகுதியில் இருந்து அனைத்து நாடுகளும் வாபஸ்பெற்றன. பேர்லின் சுவரால் பிரிக்கப்பட்டு, மேற்கு ஜேர்மனி கிழக்கு ஜேர்மனி என ஜேர்மனி தொடர்ந்து இரண்டு பகுதிகளாக காணப்பட்டன.
1990 ஆம் ஆண்டு பேர்லின் சுவர் உடைக்கப்பட்டது. எவ்வாறாயினும் ஜேர்மனி முன்னேற்றம் கண்டுவந்தது. சுவர் உடைக்கப்பட்ட பின்னர் தற்போது ஜேர்மனி ஒன்றிணைந்துள்ளது. ஜேர்மனி ஒரு நாடு. 16 மாகாணங்கள் அல்லது மாநிலங்களை உள்ளடக்கியுள்ளது. அந்த மாகாணங்களுக்கு கணிசமான சுயாட்சி காணப்படுகின்றது.
கணிசமான நிதி ஏற்பாடுகள் காணப்படுகின்றன. பாரிய அளவான அதிகாரங்கள் மாகாணங்கள் அல்லது மாநிலங்களுக்கு பகிரப்பட்டுள்ளன. சுயாமாகவே அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அந்த மாகாணங்களுக்கு காணப்படுகின்றன. நாடு என்ற வகையில் ஜேர்மனியின் அபிவிருத்திக்கும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக உள்ளது.
தற்போது உலகிலுள்ள மிகவும் பாரிய பொருளாதார அதிகாரம் கொண்ட நாடாக ஜேர்மனி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானை ஜேர்மனி நெருங்கியுள்ளது. மிகவும் மோசமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடொன்றின் நிலைமை தற்போது அதுவே. அரை நூற்றாண்டில் ஜேர்மனிக்கு அந்த இலக்கை எட்டக் கூடியதாக இருந்தது.
பொறுப்புள்ள நிர்வாகம்,முறையான பாணி, மூலம் இது சாத்தியமானது. அடோப் ஹிட்லரின் ஆட்சியில் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார நாடாக ஜேர்மனி இருந்தது. அதனாலேயே ஜேர்மனி முன்னேற்றம் அடையவில்லை. எவ்வாறாயினும் ஜேர்மனி சுதந்திரம் பெற்ற பின்னர் எல்லோரும் ஒன்றிணைந்து 16 மாகாணங்களை உருவாக்கினர்.
உலகில் சிறந்த பொருளாதார அதிகாரம்மிக்க நாடாக அவர்களால் முன்னேற்றம் அடைய முடிந்த்து. அதனால் ஜேர்மனிக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். எவ்வாறு நாடு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை ஜேர்மனி உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. அதனால் ஜேர்மனியை நாங்கள் மதிக்கின்றோம். ஸ்ரீலங்காவின் முன்னேற்றத்திற்கும் ஜேர்மனியால் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு வழங்க முடிந்துள்ளது.
ஸ்ரீலங்காவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறான பங்களிப்பு ஸ்ரீலங்காவிற்கு தேவையாக உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் கிழக்கில் இருக்கும் எதிர்கால சுவிட்ஸர்லாந்தாக கருதப்பட்டது.
சிங்கப்பூரின் பிரதமர் லீ குவாங் யூ, சிங்கபூர் சுதந்திரம் பெற்ற போது ஸ்ரீலங்காவை போல் எனது நாட்டை உருவாக்க வேண்டும் என கூறினார். அந்த தருணத்தில் ஸ்ரீலங்கா அவ்வாறான ஒரு நிலைமையில் இருந்தது. இன்று சிங்கபூரின் சராசரி வருமானம் ஸ்ரீலங்காவை விட 15 மடங்கு அதிகமாகும். அந்த நிலைமைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.
நீண்ட கால பின்னடைவை சந்தித்துள்ளது. அதிஷ்டவசமாக ஜனவரி 2015 ஆம் ஆண்டு மைத்திபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் கடந்த ஒகஸ்ட் மாதம் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தினர்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினர். தற்போது தேசிய அரசாங்கமொன்று இந்த நாட்டை ஆட்சி செய்கின்றது. நாட்டில் தற்போது பிரச்சினையாக காணப்படும் விடயம் என்ன? அனைத்து மக்கள் அல்லது இறையாண்யுள்ள குடிமக்களை உள்ளடங்கிய அரசியலமைப்பு ஒன்று இன்மையே நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினை.
1947 ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றபோது சோல்பரி அரசியலமைப்பு, நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆட்சியாளர்களால் வரையப்பட்டது.1972 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சிக்காலத்தில் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது.
எவ்வாறாயின் அரசியலமைப்பை வரையும் போது தேசிய ரீதியில் பொதுவான இணக்கப்பாடு காணப்படவில்லை. அரசியலமைப்பு வரையும் போது தமிழ் மக்கள் பங்கேற்கவில்லை. தமிழர்கள் சில முன்மொழிவுகளை சமர்ப்பித்தார்கள், ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியும் அதில் பங்கேற்கவில்லை. பாரிய அளவான சிங்கள மக்கள் அரசியலமைப்பு வரையும் செயற்பாட்டில் பங்கேற்கவில்லை. 1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் கீழ் இரண்டாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது.
அந்த அரசியலமைப்பை வரையும் செயற்பாட்டிலும் தமிழ் மக்கள் பங்கேற்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்தர கட்சிக்கு ஆதரவு வழங்கிய சிங்கள மக்களும் இதில் பங்கேற்கவில்லை. 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பும் பிரதான எதிர்தரப்பினரின் பொதுவான இணக்கபாடு இன்றி, பெரும்பான்மை சிறுபான்மை மக்களின் பொதுவான இணக்கப்பாடு இன்றி அந்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன.
அதனாலேயே இந்த நாடு செழிப்புமிக்கதாக மாறவில்லை. அதனாலேயே இந்த நாடு முன்னோக்கி செல்லவில்லை. ஏனெனில் இந்த நாட்டிற்கு அனைத்து மக்களுக்கும் அல்லது இறையாண்மையுள்ள குடிமக்களுக்கான உச்சபட்ச சட்டமொன்று இல்லை. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் அனைத்து மக்களினதும் அரசியல் கட்சியினதும் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலான அரசிலமைப்பை மறுசீரமைப்பதற்கான உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுவான இணக்கப்பாடுடன் உச்சபட்ச அதிகாரத்தை பெற்றுத்தரும் அனைத்து மக்களையும் அல்லது இறைமையுள்ள குடிமக்களை உள்ளடங்கிய அரசியலமைப்பு உருவாக்குவதில் மிகவும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தமிழ் மக்களும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் கரிசனையுடன் உள்ளன என்பதை ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.) எனக் குறிப்பிட்டுள்ளார்.








