Breaking News

பிரபாகரனை விடவும் மஹிந்த ராஜபக்ச மீதே அரசாங்கத்திற்கு அச்சம்



விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதே அரசாங்கத்திற்கு அச்சம் அதிகமென கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும் நோக்கிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பாதயாத்திரையை நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்திருந்தது.

பாதயாத்திரை முதல்நாள் நிறைவில் இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்தானந்த அலுத்கமகே, யார் கைது செய்யப்பட்டாலும் எதிர்வரும் முதலாம் திகதி பாதயாத்திரை கொழும்பை சென்றடையுமென வலியுறுத்தினார்.

மஹிந்தானந்த அலுத்கமகே “இந்த பாதயாத்திரையில் அரசாங்கத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. வேலுப்பிள்ளை பிரபாகரனைவிட மஹிந்த ராஜபக்ச மீதே இந்த அரசாங்கத்திற்கு அச்சம் அதிகம். நாமல் ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்து ஒருசில நொடிகளில் பெசில் ராஜபக்ச கைது என்ற தகவல் வந்துவிட்டது.

பெசிலுக்கு பிணை கிடைக்கும் என்ற அச்சம் காணப்படலாம் ஆகவே நாமலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. பாதயாத்திரைக்கு தலைமை வகிக்கும் நாமலை கைது செய்ய முயற்சிக்கும் இந்த அரசாங்கத்திற்கு வெட்கமில்லையா? இதிலிருந்தே தெரிகிறது அவர்களது பயம்.

நாளை என்னையும், நாளை மறுதினம் ஜோன்ஸ்டனையும் இவர்கள் சிறையில் அடைக்கலாம். ஏன் மஹிந்த ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை முதலாம் திகதி நாங்கள் கொழும்பை சென்றடைவோம்.



எங்களை தாக்குவதற்கு 500 பேர் இருந்தனர், எனினும் எங்களை பாதுகாக்க 25 பேரேனும் இருக்கவில்லை. பொலிஸ் மாஅதிபர் சிறிகொத்தவில் பணியாற்றுகின்றார் என்ற எங்களுக்குத் தெரியும். இந்த பாதயாத்திரையை குழுப்ப அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கிறது.“