யாழ் பல்கலையில் விடுதலைப் புலிகளின் பெயரில் சுவரொட்டி (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பணப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி மற்றும் தனியார் உயர்தர வகுப்புக்களுக்கு அருகாமையில், தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஜுலை 5ஆம் திகதி கரும்புலிகள் தினமாகையால் தமிழ் மாணவர்களது கவனத்தை திசைத்திருப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, திட்டமிட்டு சிலரால் மேற்கொள்ளப்பட்ட சதியாக இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கலாம் என்று, பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சுவரொட்டியில், இன்று ஈழத்தில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும், இதற்கு தமிழ் மக்களே துணை போவது கவலைக்குரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனியும் இப்படியான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்றும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர், அவர்களின் செயற்பாடுகளை நிறுத்தாவிடின் அவர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டப்பட்டிருந்தது.











