புலிகளை நினைவு கூர்ந்தமையினாலேயே, யாழ் பல்கலையில் மோதல்!
உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவுகூர்வதற்கு, நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கியதன் பிரதிபலனாகவே, அங்கு இரு சமூக மாணவர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில்கூட அமைதிப்பூங்காவாக இருந்த யாழ் பல்கலைக்கழகம், தற்போது போர்க்களமாக மாறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ் சமூகத்தினருக்கு உயிர்கொடுப்பதை விடுத்து, தமிழ் இனவாதத்திற்கே உயிர்கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
எனினும், எந்தவொரு இனவாதத்திற்கும் இந்த நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதையும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தி கூறினார்.








