சுவாமிநாதனின் கருத்துடன் முரண்படும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழக பீடங்களை இன்று முதல் படிப்படியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள, தமிழ் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை முடிவுக்கு கொண்டுவந்து மீண்டும் ஒரு மோதல் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக நேற்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மூவர் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்செய்திருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை 16ஆம் திகதி விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனத்தை இணைத்துக்கொள்ள சிங்கள மாணவர்கள் முற்பட்டதால் எழுந்த முரண்பாடுகள் மாணவர்களிடையே கைகலப்பாக மாறியது.
மாணவர்களுக்கு இடையிலான மோதல்களில் 14 மாணவர்கள் காயமடைந்ததுடன் விஞ்ஞானபீட கட்டடம் ஒன்று சேதமாக்கப்பட்டது.
இதனையடுத்து பல்கழைக்கழகம் காலவரையறையன்றி மூடப்பட்டதுடன், மோதல் குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட நிலையில், அவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக விஜயம் செய்தனர்.
இதற்கமைய பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் மாணவர் ஒன்றியத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர்களிடம், பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்ட மாணவர்கள், இவ்வாறான மோதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது என்றும் உறுதியளித்தனர்.
இதற்கமைய இன்று முதல் பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்னம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல்களுக்கு ஒரு சிலரின் குழப்பகரமான நடவடிக்கைகளே காரணம் என்று புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவிக்கின்றார்.
எனினும் அமைச்சரின் இந்தக் கூற்றை நிராகரிக்கும் யாழ். பலக்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கடந்த சனிக்கிழமை சம்பவம், எந்தவித திட்டமிடலும் அற்ற திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்வென தெரிக்கின்றது.
இதே கருத்தையே யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விக் கற்கும் சிங்கள மாணவர்களும் தெரிவித்தனர். சிங்கள மாணவர்களை இதுவரை ஒதுக்கிவைக்கும் எந்தவொரு நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்த தரிந்து கருணாரத்ன என்ற யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர், சனிக்கிழமை இடம்பெற்றது போல் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது என்றும் உறுதியளித்தார்.
அதேவேளை சிங்கள மாணவர்களுக்கும் அவர்களத கலாசார மற்றும் பாரம்பரியங்களை பின்பற்றும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தரிந்து கருணாரத்ன கேட்டுக்கொண்டார்.








