மங்களவின் கண்டனத்திற்கு பரணகம விளக்கம்
இறுதிகட்ட யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவோ, அவ்வாறு பயன்படு த்துவது சரியென்றோ தான் கூறவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.
எனினும், 2009ம் ஆண்டில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றே தாம் கூறியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கொத்துக்குண்டுகள் குறித்து, அதன் சட்டத் தன்மையை நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே தாம் அவ்வாறு கூறியதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், யுத்தகளத்தில் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவது சிறந்த ஒன்றல்ல என குறிப்பிட்டுள்ள அவர், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ”தி கார்டியன்” செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கொத்துக்குண்டுகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஐ.நா கூட்டத்தொடரிக் போதும் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
இதேவேளை, கொத்துக்குண்டு விவகாரத்தில் மெக்ஸ்வெல் பரணகம அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் அவர் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








