Breaking News

எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – மைத்திரிக்கு மகிந்த பதிலடி



அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சியை தொடங்க முற்பட்டால், இரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்றும், அதன் பின்னர் வீதியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மாத்தறையில் நடந்த நிகழ்வில் கூட்டு எதிரணியினரை எச்சரித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,

“ அச்சுறுத்தல்கள் புதிய அரசியல் கட்சிகளின் உருவாக்கத்துக்கே வழிவகுக்கும். ஒவ்வொருவருக்கும் புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் உரிமை உள்ளது.

அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இது பொதுவான நடைமுறை. புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் சுதந்திரம் நாட்டில் இருக்கிறது. அதுபற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

அச்சுறுத்தல்கள் இந்த நகர்வுகளைப் பாதிக்காது. புதிய அரசியல் கட்சியை உருவாக்குபவர்களுக்கு அது ஊக்கமளிப்பதாகவே இருக்கும்.

விளக்கமறியலில் வைப்பதாலோ அச்சுறுத்துவதாலோ ஒருவரின் அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.