'கேப்டிவ் போல்ட்' ரக ஆயுதமே லசந்த கொலைக்கு உபயோகம்!
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய 'கேப்டிவ் போல்ட்' ரக துப்பாக்கி பயன்படுத்தப் பட்டுள்ளமை குறித்து விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த ரக ஆயுத கொள்வனவு, பயன்பாடு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி உடன் விசாரணையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்கிஸை பிரதான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் இராணுவ தளபதிக்கும் லங்கா லொஜஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கும் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் கல்கிஸை பிரதான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் முன்னிலையில் அவரது உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையை ஏற்று அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனை விட இராணுவ புலனாய்வாளர்கள் 41 பேரின் கடன்கள் தொடர்பிலும் தகவல்களைப் பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை கடன்கள் தொடர்பிலான தகவல் மையத்துக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று மீளவும் பிரதான நீதிவான் சஹாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. நேற்று இவ்வழக்கில் கொலையை நேரில் பார்த்ததாக கூறப்படும் கண் கண்ட சாட்சியான லால் வெலன்டைன் என்பவர் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் அடையளம் காட்ட இருந்த நிலையில், சாட்சியாளர் தொடர்பில் கல்கிசை மேலதிக நீதிவான் சுலோச்சனா வீரசிங்க கடந்த தவணை வழங்கிய உத்தரவுக்கு அமைய அவரின் மன நிலை தொடர்பிலான சட்ட வைத்திய அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்ப்ட்டது.
விஷேட வைத்திய நிபுணர் மஹிபாலவின் அறிக்கையில் கண்கண்ட சாட்சியாக கருதப்படும் லால் வெலன்டைன் சாட்சியமளிக்கவோ, அவரை சாட்சியாக பயன்படுத்திக்கொள்ளவோ உரிய மன நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் சாட்சியாளர் ஒருவருக்குரிய தகுதியில் இல்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சுதத்துடன் மன்றில் ஆஜரான சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா நீதிவான் சஹாப்தீனிடம் கையளித்தார்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து நேற்றைய தினம் லசந்த கொலை தொடர்பில் நடத்தப்படவிருந்த அடையாள அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஸாந்த சில்வா, லசந்த கொலை தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பித்து சில உத்தரவுகளைப்பெற்றுக்கொன்டார்.
ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வங்கிக்கணக்கு விபரங்களில் ஒரு பகுதியே விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தொலைபேசி தகவல்கள் அடங்கிய அறிக்கையும் கிடைக்க வேண்டியிருப்பதாகவும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஆவணங்கள் தொடர்பிலும் அந்த நிலைமையே நீடிப்பதாகவும் புலனாயவுப் பிரிவினர் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இந் நிலையில் இராணுவ புலனாய்வாளர்கள் 41 பேர் பெற்றுக்கொண்ட கடன் விபரங்கள் தொடர்பிலான தகவல்களை தமக்கு பெற்றுத்தருமாறும் லசந்தவைக் கொலை செய்ய பயன்படுத்தியதாக நம்பப்படும் பிரத்தியேக ஆயுதம் தொடர்பிலும் தகவல்களைப் பெற்றுத் தர இராணுவ தளபதி மற்றும் ஆயுத கொள்வனவு நிறுவனமான லங்கா லொஜஸ்டிக்ஸ் ஆகிவற்றுக்கு உத்தரவிடுமாறும் புலனாய்வுப் பிரிவினர் கோரினர்.
இந் நிலையிலேயே 41 புலனாய்வாளர்களின் கடன் விபரங்களைப் பெற்றுக்கொடுக்கவும் லசந்தவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மிருக வேட்டைக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் கேப்டிவ் போல்ட் ரக ஆயுதம் குறித்து அதன் பயன்பாடு, கொள்வனவு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கி அறிக்கை பெற்றுக்கொடுக்குமாறும் இராணுவ தளபதிக்கும் லங்கா லொஜஸ்டிக் நிறுவனத்துக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.
இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த சந்தேக நபரான இராணுவ சார்ஜன்ட் மேஜர் பிரேமானத்த உடலாகமவின் சட்டத்தரணி ரசிக பாலசூரிய, அடையாள அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டதை காரணம் காட்டி பிணைக் கோரினார். லசந்தவின் கொலை தொடர்பில் சந்தேக நபர் அடையாளம் காட்டப்படவில்லை எனவும் கொலையின் பின்னரான சம்பவமான அவரது சாரதி டயஸை கடத்தியமை தொடர்பிலேயே அடையாளம் காட்டப்பட்டுள்ளதால் தனது சேவை பெறுநருக்கு பிணை வழங்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.
பிணைக் கோரிக்கைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஸாற்த சில்வாவும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி அதுல எஸ். ரணகலவும் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
அவ்விரு சம்பவங்களும் வெவ்வேறானதல்ல என விளக்கப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, லசந்த படுகொலை தொடர்பிலான விசாரணைகளுடன் சேர்த்தே அவர் சாரதியின் கடத்தல் விவகாரமும் விசாரணை செய்யப்படுவதாகவும் அது கொலையின் பின்னரான சாட்சியளிப்பு நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் விசாரணை நிறைவுறாத நிலையில் பிணை வழங்கக் கூடாது எனவும் எற்கனவே அவர் சாரதியை கடத்தி சென்று அச்சுறுத்தியுள்ள நிலையில் அவர் பினையில் செல்வது சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் எனவும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் சந்தேக நபரான இராணுவ சார்ஜன்ட் மேஜரை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் இன்றைய தினம் அவரை கம்பஹா நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதிவான் இன்று அவரை உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் குறித்த வழக்கின் அடையாள அணிவகுப்புக்காக அங்கு ஆஜர் செய்யவும் கட்டளையிட்டார்.