Breaking News

சிங்கள பௌத்த இன ஆதிக்கத்துக்கு எதிரான யுத்தம் ஆரம்பம்



வவுனியா கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள குறிசுட்டகுளத்தில் பகுதியில் அம்மன் கோவில் வாளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த கடந்த 6வருடங்களாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை இன்று அதிகாலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு 2 அரை அடி நீளம் கொண்ட குறித்த புத்தர் சிலை அம்மன் கோவில் வாளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புத்தர் சிலை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அண்மைக்காலமாக அத்துமீறி அமைக்கப்பட்டு வரும் புத்தர் சிலைகளை அகற்றுமாறு வலியுறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முடக்கும் வகையில் அம்மன் கோவில் வாளாகத்தில் கடந்த 6 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்

எனினும் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஊடகம் ஒன்று வினவியபோது, சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார்,முறைப்பாடு செய்தவர்கள் யார் என்ற தகவலை வழங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதேவேளை போருக்குப் பின்னர் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினரால் தமிழர் காணிகளில் புத்தர் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை அகற்றக்கோரியே தமிழ் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர்.

எனினும் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் இதுவரை பதிவாகாத நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு சம்பவத்திற்குப் பின்னர் திட்டமிட்ட சில சதிகாரர்கள் உள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.