Breaking News

முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றவேண்டிய அவசியமில்லை!



முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றவேண்டிய அவசியம் இல்லையென, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ள புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் திடீர் சுகயீனமுற்று ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர். அத்தோடு உயிருடன் உள்ள முன்னாள் போராளிகளில் சிலர், தமக்கு முன்னரைப் போன்று இயங்க முடியாதுள்ளதாகவும், புனர்வாழ்வின்போது எவ்வித காரணங்களையும் தெரிவிக்காமல் ஊசி மருந்துகளை இராணுவத்தினர் ஏற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் தொடர்பான அறிக்கைகள், இதுவரை உயிரிழந்த முன்னாள் போராளிகளின் மரண சான்றிதழ்கள் ஆகியவற்றை மீள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் உயிருடன் இருக்கும் முன்னாள் போராளிகளின் உடல்நலம் குறித்து வைத்திய பரிசோதனை நடத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்து, நேற்றைய தினம் வட மாகாண சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.