Breaking News

தமிழருக்கு எதிரான அநீதி தொடர்கிறது ஐ.நா குழு அறிக்கை

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் காணப்படும் அதிகளவான இராணுவப் பிரசன்னம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என இனரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐ.நா குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.   


ஐ.நா. சபையில் நடைபெற்று முடிந்த இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அநீதியை எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் வல்லுறவுகள் தொடர்பான எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்பட வில்லை.

அதுமட்டுமின்றி அரச துறைகளில் தமிழ் மொழி குறைபாட்டினால் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ந்தும் அச்சம் மிகுந்த சூழலிலேயே தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.

போர் காரணமாக இடம்பெயர்ந்தோர், கணவனை இழந்த பெண்கள், பயங்கரவாத தடைச்சட்டம், நல்லிணக்கம், காணி சுவீகரிப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் அங்கு கரிசனைக்குரியதாக உள்ளன.

அத்துடன் இனரீதியான வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.