மன்னரை போன்ற மஹிந்தரை வீதிக்கு தள்ளியது அவரது கோஷ்டி: மஹிந்த
சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று ஒரு ராஜாவைப் போல இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவரை சுற்றியுள்ள கோஷ்டி தமது சுய இலாபத்துக்காக கொளுத்தும் வெயிலில் வீதிதோறும் நடக்கவைத்துள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரணதுங்க ஆகிய மூவரையும் ஒரே மேடையில் கொண்டுவரும் முயற்சி தற்போது சாத்தியமாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளை ஒன்றிணைப்பதற்கான பல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் கை நழுவி சென்றுள்ளபோதும் அம்முயற்சியினை இதுவரை கைவிடவில்லை.
ராஜபக்ஷக்கள் மீதான எமது கௌரவம் இன்னும் குறையவில்லை. குறிப்பாக நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவை நான் இன்னும் மதிக்கிறேன். சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று ஒரு ராஜாவைப் போல இருந்தவரை அவரை சுற்றியுள்ள கோஷ்டி தமது சுய இலாபத்துக்காக கொளுத்தும் வெயிலில் வீதிதோறும் நடக்கவைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரிக்க வேண்டுமென்ற எண்ணம் நிச்சயமாக இருக்காது. எனினும், அவரை சுற்றியுள்ள குரோத மனப்பான்மை கொண்ட கோஷ்டியின் அழுத்தங்களுக்கு அவர் கட்டுப்பட்டுள்ளார். இவர்களை கட்சியிலிருந்து விலக்குவது இலகுவான விடயம் என்கின்றபோதும் நாம் அதை செய்ய விரும்பவில்லை. ஏனெனில் கட்சியை ஒன்று சேர்க்கும் முயற்சியினை நாம் இன்னும் கைவிடவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








