Breaking News

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரசியல் கைதி தப்பி ஓட்டம்



யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக ளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

 தென்மராட்சியை சேர்ந்த இராசையா ஆனந்தராஜா (37 வயது) என்பவரே நேற்றைய தினம் இரவு பத்து மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் 2012ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் மீண்டும் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் கடந்த ஜீன் 5ஆம் திகதி தனது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்தார். இதன் போது இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து இவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து juun 17ஆம் திகதியன்றும் அதன்பின்னர் பதினொரு நாட்கள் கழித்தும் தடுப்பூசியொன்று ஏற்றப்பட்டிருந்ததாகவும் இதனால் இவருக்கு உடல் உள பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த கைதியை அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்குமாறு சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்ற புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 14.08.2016 சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குறித்த கைதிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்துடன் சிறைச்சாலை அதிகாரிகளால் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வந்திருந்தன.

இந்நிலையில் நேற்று இரவு பத்துமணியளவில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். அத்துடன் இச் சம்பவம் தொடர்பாகவும் தப்பிச் சென்ற குறித்த நபரை கைது செய்வதற்கும் பொலிஸார் விசாரனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.