Breaking News

பொ.ஐங்கரநேசனிற்கு எதிரான பிரேரணை நிராகரிப்பு



வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிற்கு எதிராக விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி வடமாகாண சபை உறுப்பினர் ஆரியக்குட்டி பரஞ்சோதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பிரேரணையை ஒரு அறிவித்தலாக முதலமைச்சருக்கு அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு அதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட எந்தவொரு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கருத்துக்களை வெளியிடவில்லை.

வடமாகாணசபையின் 60 ஆவது அமர்வு நேற்று நடைபெற்ற போது வடமாகாண சபை உறுப்பினர் ஆரியக்குட்டி பரஞ்சோதி விவசாய அமைச்சில் நடைபெற்ற மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள், தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன.

ஆகவே வடமாகாண சபை ஒரு சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளும் முகமாக ஒரு தெரிவுக்குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராசா, குறித்த பிரேரணை கட்சி கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதுடன் எந்தவொரு கூட்டத்திலும் இதே பிரேரணையை கொண்டுவருவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

இது தொடர்பாக உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் க. சர்வேஸ்வரன், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த பிரேரணை தேவையற்றது என கூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனால் வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டு பிரேணை நிராகரிக்கப்பட்டுள்ளது.